தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்துக்கு காலவரம்பு நிர்ணயித்ததை எதிர்த்து வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்துக்கு காலவரம்பு நிர்ணயித்ததை எதிர்த்து வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் சங்க பொதுச் செயலாளர் பழனியப்பன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம்-2023-ல் தமிழக அரசு பல்வேறு திருத்தங்களை கடந்த ஜனவரி மாதம் கொண்டு வந்துள்ளது. அதில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் என்பது குறி்ப்பிட்ட காலத்துக்கு மட்டும் எனக்கூறி காலவரம்பு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகளுக்கான சட்டத்தில் இல்லாத விதிகளை தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ளது. பள்ளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் என்பது தற்காலிகமானதல்ல. அது நிரந்தரமானது. தனியார் பள்ளிகள் முறையாக செயல்படுவதை கண்காணிக்கவும், விதிமீறல்களை தடுக்கவும் சட்டத்தில் புதிதாக விதிகளை கொண்டு வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்தாலும், தவறு செய்யும் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப்பெற ஏற்கெனவே சட்டத்தில் இடம் உள்ளது.

தற்போது தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம்தொடர்பாக கொண்டு வந்துள்ள புதிய சட்டவிதிகள் சட்டவிரோதமானது. தன்னிச்சையானது. நடைமுறையில் சாத்தியமற்றது. எனவே தமிழக அரசின் இந்த புதிய சட்ட விதிகளை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறை 4 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in