Published : 11 Sep 2024 05:12 AM
Last Updated : 11 Sep 2024 05:12 AM

5 மாவட்டங்களில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகளை இம்மாதம் 30-ம்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர்ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் ரூ.38.50 கோடியில் வீராங்கல் ஓடை, ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ஏரி, கூவம், அடையாறு போன்றவற்றில் மிதக்கும் தாவரங்கள் மற்றும் பொருட்களை இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் பணியை செப்.30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

அதுபோல, ரூ.590 கோடியில் மேற்கொள்ளப்படும் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளில் முக்கியப் பகுதிகளான தணிகாச்சலம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், மாதவரம் ரெட்டேரி மற்றும் கெருகம்பாக்கம் கால்வாய் போன்றவற்றில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் வரும் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

மேலும், தேவையான மணல் மூட்டைகள், காலி கோணிகள், சவுக்கு கம்புகள் ஆகியவற்றை பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக ஆங்காங்கே போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x