சென்னை | குப்பையில் கிடந்த ரூ.1.65 லட்சம் தங்க நகை: உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: குப்பையில் கிடந்த ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை எடுத்து உரிமையாளரிடம் தூய்மைப் பணியாளர் ஒப்படைத்த சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது. சென்னை அடையாறு பரமேஸ்வரி நகரை சேர்ந்தவர் சி.பாலு.

இவர் மாநகராட்சியின் அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட 174 வார்டில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி பரமேஸ்வரி நகர் முதல் தெருவை சேர்ந்த காமாட்சி சந்தானம் என்பவர் தனது வீட்டில் இருந்த ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்க நகையைத் தொலைத்துள்ளார்.

அதற்கு முன் அந்த தெருவழியே குப்பையை வாங்கிச் சென்ற பாலு, அவற்றை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்துக் கொண்டிருந்தார். அப்போது காமாட்சி சந்தானம் தொலைத்த தங்க நகையை குப்பையிலிருந்து பாலு எடுத்தார்.

ஆனால், தங்க நகையின் உரிமையாளர் யார் எனத்தெரியாததால், உடனே கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கண்காணிப்பாளர் மற்றும்பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் விசாரித்தனர். அப்போது, தொலைந்த தனது நகையை காமாட்சிசந்தானமும் தேடிக்கொண்டிருந்ததால், பாலு கொண்டுவந்த நகை தன்னுடையது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீண்ட தேடுதல்களுக்கு பிறகு நகையை அதன்உரிமையாளரிடம் தூய்மைப் பணியாளர் பாலு ஒப்படைத்தார். நகை கிடைத்த சந்தோஷத்தில் காமாட்சி சந்தானம் தூய்மைப் பணியாளர்களை வீட்டுக்கு அழைத்து நன்றி தெரிவித்தார்.

பாலுவின் இந்த செயல் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தெரியவர, அவர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக சமீபத்தில் விருகம்பாக்கம் பகுதியில் குப்பையில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகையை தூய்மைப் பணியாளர் அந்தோணிசாமி கண்டறிந்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். மேயர்பிரியா அவரை அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in