Published : 10 Sep 2024 08:21 AM
Last Updated : 10 Sep 2024 08:21 AM

விநாயகர் சிலையை கரைத்துவிட்டு திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழப்பு

போடி: தேனி மாவட்டம் தேவாரம் அருகே விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்துவிட்டு திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்ததில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

தேவாரம் அருகே உள்ளமறவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர், 5 அடி உயர விநாயகர் சிலையை வைத்து விநாயகர்சதுர்த்தி விழாவைக் கொண்டாடினர்.

பின்னர், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரின் டிராக்டரில் அந்தசிலையை கொண்டு சென்று, சிந்தலைச்சேரி குளத்தில் கரைத்து விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். டிராக்டரை விநாயக மூர்த்தி (45) ஓட்டிவந்தார்.

பள்ளத்தில் கவிழ்ந்தது: சங்கராபுரம் வழியாக பிரதான சாலையில் வராமல், குறுக்குப் பாதை வழியாக ஓட்டுநர் டிராக்டரை ஓட்டி வந்தார். டிராக்டர் பின்புறம் இணைக்கப்பட்டிருந்த டிரைலரில் 3 சிறுவர்கள் அமர்ந்திருந்தனர். ஓட்டுநருக்கு அருகே 4 பேர் அமர்ந்து வந்தனர்.

இந்நிலையில், இரவு 8.30 மணி அளவில் குறுக்குப்பாதையில் இருந்த பள்ளத்தில் திடீரென டிராக்டர் கவிழ்ந்தது. இதில் டிரைலரில் அமர்ந்திருந்த மறவபட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஷால் (13) தமிழன் மகன் நிவாஸ் (14) பிரபு மகன் கிஷோர் (14) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

முன்பகுதியில் அமர்ந்திருந்த 3 பேர் காயம் இன்றி தப்பிய நிலையில் ஓட்டுநர் விநாயகமூர்த்தியின் மகன் மருதுபாண்டிக்கு (15) தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த தகவல் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாது காப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்பு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக் காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஓட்டுநர் கைது: இந்த விபத்து குறித்து தேவாரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் ஓட்டுநர் விநாயக மூர்த்தியைக் கைது செய்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தது தேவாரம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x