Published : 10 Sep 2024 08:38 AM
Last Updated : 10 Sep 2024 08:38 AM
கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை வடபாதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (54). விவசாயியான இவரது வயலில் அறுவடை செய்த நெல்லை வலசக்காடு அரசு நேரடி கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்கு கொண்டு சென்றார்.
நேரடி கொள்முதல் நிலைய ஊழியர்கள் மூட்டைக்கு ரூ.55 கமிஷன் தருமாறு கேட்டுள்ளனர். சந்தோஷ்குமார் கமிஷன் தர மறுத்துள்ளார். இதனால், அவரது நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.
மனஉளைச்சலுக்கு ஆளான சந்தோஷ்குமார், கடந்த 6-ம் தேதி மாலை, வயலுக்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்துக்கு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இதுகுறித்து கடலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் தங்க பிரபாகரனிடம் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.
அதன்படி மண்டல மேலாளர் விசாரணை நடத்தி, வலசக்காடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய பருவகால பட்டியல் எழுத்தர் பி.பாலகுமாரன், உதவியாளர் சி.முத்துக்குமரன், காவலர் எ.ரமேஷ்குமார் ஆகிய 3 பேரையும் நேற்று பணி நீக்கம் செய்தார்.
இதற்கிடையே விவசாயி சந்தோஷ்குமாரின் நெல் மூட்டைகள் அனைத்தும் வலக்காடு நேரடிநெல்கொள்முதல் நிலையத்தில் நேற்று முன்தினமே கொள்முதல் செய்யப்பட்டதாக, அந்த நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT