Published : 10 Sep 2024 05:36 AM
Last Updated : 10 Sep 2024 05:36 AM
சென்னை: திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நடைமேடை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு பாஸ்ட் மின்சார ரயில்கள் நின்று செல்வதால் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், அரக்கோணம் இடையே உள்ள முக்கியமான ரயில் நிலையமாக திருநின்றவூர் நிலையம் இருக்கிறது. இங்கு கோயில்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகளும் இருப்பதால், இந்த ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். நாள்தோறும் 30,000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போதெல்லாம், இங்கு ரயில்களின் சேவைகள் பாதிக்கப்படுகின்றன.
இதற்கிடையில், இங்கு ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய நடைமேடை கட்டும் பணிகள் முடிந்து, நேற்று முதல் பயன்பாட்டு வந்தது. இதனால், வழக்கமாக செல்லும் ரயில்களில் தாமதம் ஏற்படுவதை தவிர்ப்பதோடு, பாஸ்ட் மின்சார பாஸ்ட் ரயில்களும் இங்கு நின்று செல்வதால், பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: மின்சார ரயில்களின் சேவையில் பாதிப்பு இன்றி இயக்க, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நடைமேடை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னை செல்லும் 8 பாஸ்ட் மின்சார ரயில்களும் இங்கு நின்று செல்லும். தற்போது, 4 பாஸ்ட் மின்சார ரயில்கள் நின்று செல்ல தொடங்கி உள்ளன. மற்றவை விரைவில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநலச் சங்கச் செயலாளர் எஸ்.முருகையன் கூறுகையில், “திருநின்றவூர் ரயில் நிலையத்தில், புதிய நடைமேடை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று பயணிகளின் 15 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. இதனால், மின்சார ரயில்கள் தாமதம் ஏற்படுவதை தடுப்பதோடு, பாஸ்ட் ரயில்களும் நின்று செல்லும் வசதி கிடைப்பதால், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT