

பழநி கோயில் சரவணப்பொய்கை மழையில்லாமல் வறண்டதால் முடி இறக்கும் பக்தர்கள், அங்குள்ள குளியல் அறை தொட்டிகளில் லாரிகளில் கொண்டு வந்து நிரப்பிய தண்ணீரில் `காக்கை' குளியல் போடுகின்றனர்.
பழநி தண்டாயுதபாணி மலைக்கோயிலில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து முடி இறக்குதல், காதுகுத்து உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்த தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதனால், பக்தர்கள் முடிக்காணிக்கை மூலமே தேவஸ்தானத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இந்த கோயில் நிர்வாகத்தின் கீழ் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்த வசதியாக, சண்முகநதி முடி மண்டபம், அடிவாரம் பூங்கா ரோடு முடிக்கொட்டகை, சரவணப்பொய்கை முடிக் கொட்டகை உள்ளிட்ட 7 இடங்களில் முடிக்காணிக்கை நிலையங் கள் செயல்படுகின்றன. இங்கு பக்தர்களிடம், முடிகாணிக்கை செலுத்த நபர் ஒருவருக்கு டிக்கெட் கட்டணமாக 10 ரூபாய் தேவஸ்தானம் வசூலிக்கிறது. முடிக்காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு சிறப்பு சலுகையாக, கோயில் நிர்வாகம் மலைக்கோயிலில் ரூ.100 சிறப்பு தரிசன வழியில் இலவச அனுமதிக்கு ஏற்பாடு செய்கிறது.
கடந்த காலத்தில் முடிக் காணிக்கை செலுத்தும் பக்தர்கள், கோயில் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை, சண்முகா நதி தீர்த்த தண்ணீரில் குளித்து நேர்த்திக்கடன் செலுத் தினர். ஆன்மிக சுற்றுலா, காது குத்து, காவடி, பாதயாத்திரை உள்ளிட்ட மற்ற நேர்த்திக்கடன் பக்தர்கள், இடும்பன் குளம், சண்முகநதி, சரவணப்பொய்கையில் குளித்து விட்டுத்தான் மலைக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக பழநியில் மழை பொய்த்துவிட்ட தால் வரட்டாறு, இடும்பன் குளம் சண்முகநதி, சரவணப் பொய்கையில் தண்ணீர் இல்லை. அதனால் முடி இறக்கும் பக்தர்களுக்காக, தேவஸ்தானம் சரவணப்பொய்கையில் ஆழ்துளை கிணறு அமைத்து அதில் கிடைத்த தீர்த்தத் தண்ணீரை சில ஆண்டுகள் குளியல் அறைகள் கட்டி குளிக்க வழங்கியது. பக்தர்கள் தண்ணீர் நிரப்பிய தொட்டிகளில் இருந்து பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து குளித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சரவணப்பொய்கை ஆழ்துளை கிணறும் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் வறண்டதால் தேவஸ்தானம், மற்ற இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து லாரிகள் மூலம் சரவணப்பொய்கை தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி
பக்தர்களுக்கு குளிக்க வழங்கு கிறது. பக்தர்கள் ஆழ்துளை கிணறு தண்ணீரில் `காக்கை' குளியல் போட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். அதனால் பக்தர்கள் முடி இறக்கும் நேர்த்திக் கடன் செலுத்திய திருப்தியில்லாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பழநி கோயில் இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம் கூறியது: முன்பே மழையில்லாமல் சரவணப் பொய்கையில் தண்ணீர் இல்லை. மற்ற ஆழ்துளை கிணறுகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவந்து தட்டுப்பாடில்லாமல் பக்தர்கள் குளிக்க ஏற்பாடு செய்துவருகிறோம் என்றார்.