“அமெரிக்காவில் இதுவரை ரூ.4,000 கோடி முதலீடுகளை முதல்வர் ஈர்த்துள்ளார்” - அமைச்சர் முத்துசாமி

“அமெரிக்காவில் இதுவரை ரூ.4,000 கோடி முதலீடுகளை முதல்வர் ஈர்த்துள்ளார்” - அமைச்சர் முத்துசாமி
Updated on
1 min read

கோவை: “அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இதுவரை 11 நிறுவனங்களுடன் ரூ.4,000 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மதுரை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகளை வழங்கியதையடுத்து, கோவை மாவட்டம், நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று (செப்.9) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 1,727 மகளிர்‌ சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 96.47 கோடி வங்கி கடன் இணைப்புகளை வழங்கினார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது: “தமிழக ஊரக மற்றும்‌ நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்‌ கீழ்‌ இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின் மதுரையில்‌ நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும்‌ மகளிர்‌ சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2,735 கோடி வங்கி கடன் இணைப்புகளை வழங்கினார்.

கோவை மாவட்டத்திலும் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவிக்குழு திட்டம் கலைஞர் அவர்களால் சிந்தித்து செயல்படுத்திய சிறப்பான திட்டமாக நான் கருதுகிறேன். அதேபோல் தமிழக முதலமைச்சர் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மாதம் ஒருமுறை அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டத்தை நடத்தி, ஒவ்வொரு அரசு துறைகளில் எந்த மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து முதல்வர் ஆய்வு செய்கிறார். அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இதுவரை அங்கு 11 நிறுவனங்களுடன் ரூ. 4,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளார். அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in