Published : 09 Sep 2024 06:19 AM
Last Updated : 09 Sep 2024 06:19 AM
சென்னை: போக்குவரத்துக் கழகங்கள் ரூ.22 கோடி நிலுவைத் தொகை செலுத்தாததால் உறுப்பினர்களுக்கு கடன் வழங்க முடியாத நிலை இருப்பதாக போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் கூறியுள்ளது.
போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகிய கழகங்களைச் சார்ந்த பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
போக்குவரத்து பணியாளர்களின் சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதம்தோறும் கடன் மனுக்கள் பெறப்பட்டு, கடன் தொகை வழங்குவது வழக்கம். ஆனால், தற்போது கடன் வழங்க முடியாத நிலை இருப்பதாக கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் வெளியிட்ட அறிக்கை: போக்குவரத்துக் கழகங்கள் உறுப்பினர்களின் கடனுக்கான தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்த மாத தவணை தொகையை சங்கத்துக்கு செலுத்தாமல் பெருமளவு அதாவது ரூ.22 கோடி அளவில் நிலுவை வைத்துள்ளதால் உறுப்பினர்களுக்கு சங்கத்தின் மூலம் கடன் வழங்குவது மற்றும் சங்க கணக்கை முடித்தவர்களுக்கு தொகை வழங்க முடியாத நிலை இருக்கிறது.
மத்திய கூட்டுறவு வங்கியிலும் கடன் பெற இயலவில்லை. பிடித்தம் செய்த தொகையை போக்குவரத்து கழகங்களிடமிருந்துவசூலிக்க உரிய நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, செப். 13-ம் தேதி வரை உறுப்பினர்களிடம் இருந்து கடன் மனுக்கள் பெறப்படும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு பிடித்தம் செய்த தொகைக்கு மட்டும் கடனாக வழங்கப்படும். நிதிநிலைமை காரணமாக கடன் உயர்வு வழங்க இயலாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT