‘‘வழக்கறிஞர்களுக்கு நூலகம் முதுகெலும்பு போன்றது’’: தலைமை நீதிபதி பெருமிதம்

உயர்நீதிமன்ற டிஜிட்டல் நூலக திறப்பு விழாவில் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார்
உயர்நீதிமன்ற டிஜிட்டல் நூலக திறப்பு விழாவில் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார்
Updated on
1 min read

மதுரை: "வழக்கறிஞர்களுக்கு நூலகம் முதுகெலும்பு போன்றது. நூலகம் வழக்கறிஞர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்" என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எம்எம்பிஏ) புதுப்பிக்கப்பட்ட நூலகம் திறப்பு எம்எம்பிஏ தலைவர் மூத்த வழக்கறிஞர் ஐசக்மோகன்லால் தலைமையில் நடைபெற்றது. புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்.

பின்னர் தலைமை நீதிபதி பேசுகையில், "மதுரையின் அடையாளம் மீனாட்சியம்மன் கோயில், ஜல்லிக்கட்டு, நீதிக்காக போராடிய சிலப்பதிகார கண்ணகி. அந்த பட்டியலில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வும் இடம் பெற்றுள்ளது. மதுரை மண் வீரம், சக்தி, நீதிக்கு பெயர் பெற்றது. முன்பு வழக்கறிஞர்களாக இருந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் வழக்கறிஞர்களாக வந்தனர். தற்போது 90 சதவீதம் முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் உள்ளனர்.

வழக்கறிஞர்களுக்கு நூலகம் முதுகெலும்பு போன்றது. வழக்கறிஞர் சங்கத்தின் டிஜிட்டல் நூலகம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் நூலகத்தை அனைத்து வழக்கறிஞர்களும் தவறாமல் பயன்படுத்த வேண்டும். இதனால் வழக்கறிஞர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும்” என்று நீதிபதி கூறினார்.

இந்நிகழ்வில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபீக், உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்த ராஜன், சங்க நிர்வாகிகள் எஸ்.வினோத், வழக்கறிஞர்கள் கு.சாமிதுரை, எம்.கே.சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். சங்க பொதுச் செயலாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in