Published : 13 Jun 2018 11:11 AM
Last Updated : 13 Jun 2018 11:11 AM

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: விஜயபாஸ்கர்

தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

உறுப்பு தானம் பெற பதிவு செய்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. அப்படி காத்திருப்புப் பட்டியலில் இந்தியர்கள் யாரும் இல்லை என்றால்தான் வெளிநாட்டவர்களுக்கு உறுப்பு தானம் வழங்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

சட்டப்பேரவையில் கேள்வி..

தி இந்து ஆங்கில நாளிதழில், தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்திய நோயாளிகள் காக்கவைக்கப்படுவதாகவும் வெளிநாட்டு நோயாளிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் ஒரு செய்தி வெளியானது.

அதுவும் கடந்த 2017-ல் சென்னையில் மட்டும் இதய மாற்று அறுவை சிகிச்சையில் 25 சதவீதமும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் 33 சதவீதமும் வெளிநாட்டவர்க்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "அந்த அறிக்கை தவறானது. தமிழகத்தின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்து பிரதமர் மோடியே பாராட்டியிருக்கிறார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் டிரான்ஸ்டான் அமைப்பில் பதிவு செய்திருக்கும் நோயாளிக்குத்தான் வழங்கப்படுகிறது. அப்படி, அந்த உறுப்பு அரசு மருத்துவமனை நோயாளிக்கு தேவைப்படாமல் இருந்தால் மட்டுமே தனியார் மருத்துவமனைக்கு தகவல் அளிக்கப்படுகிறது. அவர்களும் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் (ROTTO- Regional organ tissue transplant organisation) ரோட்டோவுக்கு தகவல் அளிக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார்.

வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க நடவடிக்கை:

செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான சிறிய குற்றச்சாட்டுகூட விசாரணைக்கு உட்படுத்தப்படும். தமிழ்நாடு ட்ரான்ஸ்பிளான்ட் அதாரிட்டி வெளிப்படைத்தன்மையுடையது. வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அப்போது சூப்ரா-அர்ஜன்ட் பிரிவை ரத்து செய்ய முடிவெடுத்தோம். அதாவது, நோயாளிக்கு 2 அல்லது 3 நாட்களுக்குள் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிலை உள்ளபோது இத்தகைய ரெட் அலர்ட் குறுந்தகவல் அனுப்பப்படும். காத்திருப்புப் பட்டியலில் உள்ள மூப்பின் அடிப்படையிலேயே உறுப்பு தானம் வழங்குவது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது வயது, இதயத்தின் அளவு, ரத்தவகை ஆகியன மிக அவசியமாக கண்காணிக்கப்படுகிறது. உறுப்பு தானம் பெறுபவருக்கு இவையெல்லாம் சரியாகப் பொருந்தினால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இதயத்தை எடுத்த 6 மணி நேரத்துக்குள் அதை தானமாகப் பெறுபவருக்கு பொருத்திவிட வேண்டும். இல்லையேல் அது பயனற்றதாக ஆகிவிடும். எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உறுப்பு குறித்து மாநில அளவில் பிராந்திய அளவில் டிக்ளைன் மெசேஜ் வந்தால் மட்டுமே அதை வெளிநாட்டவருக்கு அளிக்கிறோம்" என்றார்.

சேலம் விவகாரத்தில் விரிவான விசாரணை:

சேலத்தில் விபத்தில் இறந்த கேரளாவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது உறுப்புகளை அவரது உறவினர்களின் அனுமதியில்லாமலேயே எடுத்து தானமாக வழங்கிய விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு புகார் குறித்து சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, "மருத்துவ சேவை இயக்குநரகம் இந்தப் புகார் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளும் என்றும். தனியார் மருத்துவமனைகளில் இந்திய நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னுரிமை அளிக்கப்படாதது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x