Published : 09 Jun 2018 07:31 AM
Last Updated : 09 Jun 2018 07:31 AM

தாம்பரத்தில் புதிய ரயில் முனையம்: ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹன் திறந்துவைத்தார்; பயணிகள் வசதிக்காக கூடுதல் ரயில்களை இயக்க ஆலோசனை

தாம்பரத்தில் ரூ.40.4 கோடி செல வில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரயில் முனையத்தை ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹன் நேற்று திறந்துவைத்தார். தாம்பரம் - திருநெல்வேலி இடையே முன்பதிவில்லா பெட்டிகளைக் கொண்ட அந்த்யோதயா விரைவு ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார். தற்போது, தாம்பரத்தில் இருந்து 4 விரைவு ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மேலும் புதிய ரயில்களின் சேவை தொடங்குவது குறித்து தெற்கு ரயில்வே ஆலோசனை நடத்தி வருகிறது.

சென்னை, புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல, பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதனால், ரயில் சேவையை விரிவுபடுத்தும் வகையில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் முனையங்களுக்கு அடுத்ததாக 3-வது ரயில் முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தாம்பரம் தேர்வு செய்யப் பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு தாம்பரத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. மொத்தம் ரூ.40.4 கோடி செலவில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் இந்த முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. 24 ரயில் பெட்டிகளை நிறுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், 600 மீட்டர் தொலைவுக்கு 2 தனி பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கும் வசதியும் உள்ளது.

புதிய ரயில் முனையம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஷிரேஸ்டா வரவேற்புரை ஆற்றினார். ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹன், கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகி யோர் தாம்பரம் ரயில் முனையத்தை திறந்து வைத்தனர். மேலும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரயில் சேவையையும் தொடங்கிவைத்தனர்.

விழாவில் ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹன் பேசும்போது, ‘‘ரயில் பயணிகளுக்கு தரமான சேவையை வழங்கும் வகையில் பல்வேறு புதிய மாற்றங்கள், வசதிகளை ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது. தற்போது தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில் சேவையை பெற முடியும். செங்கோட்டை - புனலூர் இடையே ரூ.358 கோடியில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி முடிக்கப்பட்டு இன்று ரயில் சேவை தொடங்கவுள்ளது. இதன்மூலம் தமிழகம், கேரளா இடையே ரயில் சேவை அதிகரிக்கும். விரைவு ரயில்களின் வேகத்தை சராசரியாக மணிக்கு 125 கிமீ அளவுக்கு அதிகரிக்கும் வகையில் பாதைகள், கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன’’ என்றார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘‘கடந்த மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய திட்ட மான விழுப்புரம் - மதுரை இடையே இரட்டை பாதை பணி கள் முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 27 ரயில்வே திட்டப் பணிகள் ரூ.20,064 கோடி செலவில் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த்யோதயா விரைவு ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்’’ என்றனர்.

இந்த விழாவில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.என்.ராமச்சந்திரன் எம்பி, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் நவீன்குலாத்தி நன்றியுரை ஆற்றினார்.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்து பயணிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்க முடியும். ஏற்கெனவே தாம்பரத்தில் இருந்து 3 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, அந்த்யோதயா விரைவு ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 2 புதிய விரைவு ரயில்களின் சேவையை தாம்பரத்தில் இருந்து தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x