சொ.கு வழக்கில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், தென்னரசு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

சொ.கு வழக்கில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், தென்னரசு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
Updated on
1 min read

புதுடெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், தென்னரசு ஆகியோர் விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அமைச்சர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

முன்னதாக, அமைச்சர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர், விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களின் வழக்குகளை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நடைமுறை சரியல்ல என வாதிட்டனர். இதையடுத்து, அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும், இந்த வழக்கு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

கடந்த திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை சுகாதாரம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது, ​​ராமச்சந்திரன் தனது மனைவி மற்றும் நண்பர் கே.எஸ்.பி. சண்முகமூர்த்தியின் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, ​​தங்கம் தென்னரசு தனது பெயரிலும், மனைவி பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in