Published : 28 Jun 2018 02:00 PM
Last Updated : 28 Jun 2018 02:00 PM

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 10 மாணவ, மாணவியர் 200க்கு 200

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், முதல் 10 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று (வியாழக்கிழமை) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில் கோவையை சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி முதலிடம் பெற்றார். முதல் பத்து இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தரவரிசை பட்டியலை வெளியிட்டு அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசியதன் விவரம்:

“ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் தகுதி வாய்ந்தவர்களில் தரவரிசை பட்டியலில் முதல் 10 பேர் 200-க்கு 200 மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். கோவை மாணவி கீர்த்தனா ரவி முதலிடத்தையும், ரித்விக் இரண்டாம் இடத்தையும், ஸ்ரீவர்ஷினி மூன்றாம் இடத்தையும், அர்ஜூன் அசோக் நான்காம் இடத்தையும், சுஜிதா 5-வது இடத்தையும், அப்துல் காதர் 6-வது இடத்தையும், யமுனாஸ்ரீ 7-வது இடத்தையும் நிஷா 8-வது இடத்தையும், நிதிஷ்குமார் 9-வது இடத்தையும், மணிகண்டன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

1,59,631 பேரில் 1,09,850 பேர் தான் இன்றைக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

ஆன்லைன் கவுன்சிலிங் முதன்முறையாக நடைபெறுகிறது என்பதால் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் பலமுறை ஆய்வு செய்திருக்கிறோம். அதற்குரிய மென்பொருள்கள் உள்ளன. அதனால், எந்தவித குழப்பமும், மாணவர்களுக்கு பாதிப்பும் இன்றி கவுன்சிலிங் நடத்தப்படும். 509 கல்லூரிகள் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளன. மொத்தம் 1,76,865 பொறியியல் இடங்கள் உள்ளன. அதில், 18,761 நிர்வாக ஒதுக்கீடுகள்.

தரவரிசைப் பட்டியல் சரிபார்க்கப்பட்ட பிறகு ஏதேனும் தவறு இருப்பதாக மாணவர்கள் கருதினால் அதனை திருத்திக் கொள்வதற்கு ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவார காலத்திற்குள்ளாக, சென்னைக்கு வந்து செயலர், பொறியியல் சேர்க்கை அலுவலகத்தில் குறைகளை சரிசெய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஜூலை 1 முதல் ஜூலை 10 வரை மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. மருத்துவ கவுன்சிலிங் முடிந்தவுடன் பொறியியல் கவுன்சிலிங் ஆரம்பிக்கப்படும். ஜூலை 30-ம் தேதிக்குள் பொறியியல் கவுன்சிலிங் முடிக்கப்பட வேண்டும். ஜூலை 30-ம் தேதிக்குள் முடிக்க முடியாது என்பதால், உச்ச நீதிமன்றத்தை அனுகியுள்ளோம். காலக்கெடுவை நீட்டிக்க கோரியுள்ளோம்” என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x