

சிவகங்கை அருகே அழகமாநகரி கிராமத்தில் தொடர்ச்சியாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போயின. போலீஸில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால், ஊர்மக்களே குழு அமைத்து இரவு பகலாக ஆடு திருடர்களை கண்காணித்தனர். கடந்த புதன்கிழமை, ஆடு திருடர்கள் இரண்டு பேர் ஊரார் கையில் சிக்கினர். அவர்களை வசமாக ‘கவனித்து’ விசாரித்தபோது, இன்னும் இரண்டு பேர் ஊருக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல் கொடுத்தனர்.
அவர்களையும் தந்திரமாக வளைக்க நினைத்த ஊர்க்காரர்கள், அதில் ஒருவனின் செல்போனை வாங்கி, “டேய்.. நாங்க மந்தைக்கிட்ட நிக்கிறோம். நீங்க எங்கடா நிக்கிறீங்க?’’ என்று கேட்டனர். சிக்கிச் சின்னா பின்னமாகப் போவது தெரியாமல் மற்ற இருவரும், “நாங்க பஞ்சாயத்து போர்டு ஆபீஸ்கிட்ட நிக்கிறோம்டா..” என உண்மையை சொல்ல.. அவர்களையும் சுற்றி வளைத்து ‘யாகம்’ நடத்திய ஊர்க்காரர்கள், நான்கு பேரையும் கொண்டு போய் போலீஸில் ஒப்படைத்தனர்.
- சுப.ஜனநாயகச்செல்வம்