

கூடலூர் அருகே அதிகாரிகளு டனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஞாயிற்றுக்கிழமை யானை தாக்கி இறந்தவரின் சடலத்துடன் 24 மணி நேர சாலை மறியலில் ஈடுபட்டு, மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே அய்யன்கொல்லி பகுதிக்கு உட்பட்ட ஆதிவாசி காலனியைச் சேர்ந்தவர் பாலன் (55). இவர், ஞாயிற்றுக்கிழமை மதியம் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்த மதியம் முதல் மாலை வரை வனக்கோட்ட வன அலுவலர் நேரில் செல்லாததால், ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர் கோட்டாட்சியர் ஜெகஜோதி, தேவாலா காவல் ஆய்வாளர் சக்திவேல் முருகன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் ஆவேசமடைந்த மக்கள் தாக்கியதில், காவல் ஆய்வாளர் சக்திவேல் முருகன் காயமடைந்தார்.
அதிகாரிகளின் சமாதானத்தால் திருப்தி அடையாத மக்கள், சடலத்துடன் இரவு முழுவதும் மறியலை தொடர்ந்ததால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அய்யன்கொல்லி பகுதியிலுள்ள கடைகள் திங்கள்கிழமை காலை அடைக்கப்பட்டன. பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் பேச்சுவார்த்தை
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், கூடலூர் வனக்கோட்ட வன அலுவலர் தேஜஸ்வி ஆகியோர் திங்கள்கிழமை காலை முதல் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் கூறியது:
வருவாய் நிலங்களில் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ், மக்கள் அகழி வெட்டிக் கொள்ளலாம். ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து தெரு விளக்குகள் அமைக்கப்படும். இப்பகுதியில் நடமாடும் 13 யானைகளை, கும்கி யானைகள் உதவியுடன் முதுமலை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பலியான பாலனின் மனைவி கருப்பிக்கு வீடு, ஓய்வூதியம் அளிக்கப்படும். பலியானோர் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.
இதையடுத்து 24 மணி நேர மறியலை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.