Published : 05 Sep 2024 05:40 AM
Last Updated : 05 Sep 2024 05:40 AM

உணவுக்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை காலணியால் தாக்க முயன்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

தருமபுரி அரசு மருத்துவமனை எதிரில் செயல்படும் ஓட்டலில் தகராறில்ஈடுபட்டு, உரிமையாளரை காலணியை கழற்றி அடிக்க முயன்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் காவேரி.

தருமபுரி: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டஓட்டல் உரிமையாளரை காலணியை கழற்றி தாக்க முயன்றகாவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் புறக்காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ காவேரி அந்த ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளார். சாப்பிட்டு முடித்த பின்னர் உணவுக்குப் பணம் கொடுக்குமாறு ஓட்டல் உரிமையாளர் கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த எஸ்எஸ்ஐ காவேரி பணத்தை எடுத்து மேஜை மீது வீசியபடி, ஓட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, காலில் அணிந்திருந்த காலணியை (ஷூ) கழற்றி அவரைத் தாக்க முயன்றுள்ளார். தொடர்ந்து, ஓட்டல் ஊழியர்கள் காவேரியை சமாதானப்படுத்தினர்.

இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவானது. மேலும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த ஓட்டலுக்கு அவ்வப்போது சாப்பிட வரும் எஸ்எஸ்ஐ உணவுக்கான முழு தொகையை வழங்காமல், குறைந்த தொகையை மட்டுமே வழங்கிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த தகவலும் வைரலானது.

இதையறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், சம்பவம் குறித்து விசாரிக்குமாறு டிஎஸ்பி சிவராமனுக்கு உத்தரவிட்டார். விசாரணையில், எஸ்எஸ்ஐ காவேரி தவறு செய்தது உறுதியானதால், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்மகேஸ்வரன் நேற்று உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x