Published : 05 Sep 2024 04:35 AM
Last Updated : 05 Sep 2024 04:35 AM

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு தொகுதி, வார்டு மேம்பாட்டு நிதிகளை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே .என்.நேரு, சேகர்பா பு. மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் தா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம் : ம.பிரபு |

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு எம்பி, எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதியை பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதியாக சென்னை மாநகராட்சி உள்ளது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் தாக்கத்தால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தலைமையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 22 தொகுதிகளின் எம்எல்ஏக்கள், மண்டலக்குழு தலைவர்கள், மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத் துறை, மின்துறைஉள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஏற்கெனவே தெரிவித்த வெள்ள பாதிப்பு பிரச்சினைகள் குறித்தும், அதற்கு மாநகராட்சி எடுத்தநடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்களுக்கு விளக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: அதிகாரிகள் அனைவரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தொகுதி மற்றும் வார்டு மேம்பாட்டு நிதியை இப்பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இப்பணிகளில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இந்த ஆய்வுக்கூட்ட முடிவுகள் குறித்து முதல்வரிடம் அறிக்கையாக அளிக்க இருக்கிறேன். அதிகாரிகள் ஆய்வின்போது எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்குமுக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் உதவிபுரியும் தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு அத்தியாவசியமானது மின்சாரம். பேரிடர் காலங்களில், பொதுமக்களை பாதிக்காதவாறு சேவைகளை வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கான பிற துறை அனுமதிகளை முன்கூட்டியே பெற்றுவிட்டதாக என்னிடம் தவறான தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன், நீர்வளத்துறை செயலர் மணிவாசன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, குரோம்பேட்டை ராதா நகரில் ரூ.43.74 கோடியில் நடைபெறும் சுரங்கப்பாதை பணிகளை உதயநிதி ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x