Published : 30 Jun 2018 08:06 AM
Last Updated : 30 Jun 2018 08:06 AM

திறந்தவெளியில் சாயக் கழிவை வைத்திருந்ததாக புகார்; மதுரா கோட்ஸ் ஆலையில் மின் இணைப்பு துண்டிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை

திறந்தவெளியில் சாயக் கழிவை கொட்டி வைத்திருந்த குற்றச்சாட்டில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மதுரா கோட்ஸ் ஆலைக்கு மின் இணைப்பை துண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அம்பாசமுத்திரம் தாலுகா ஆலடியூரில் மதுரா கோட்ஸ் நூற்பாலை உள்ளது. இந்த ஆலையில் விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்க்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இந்த ஆலை இயங்கிக்கொண்டு இருந்தது. அப்போது ஆலைக்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆலையின் மின் இணைப்பை துண்டித்தனர். ஜெனரேட்டர் மூலமும் ஆலையை இயக்கக் கூடாது என்றும், மீறி இயக்கினால் ஆலைக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஆலையின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இரவுப் பணிக்கு வந்த தொழிலாளர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆட்சியர் விளக்கம்

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறும்போது, “மதுரா கோட்ஸ் நிர்வாகம் சுமார் 2 ஏக்கர் திறந்தவெளியில் சாயக் கழிவை கொட்டி வைத்துள்ளது. இதனால், அந்த இடத்துக்கு அருகில் உள்ள 4 கிணறுகளில் நீர் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அளித்தது. ஆனால், அதற்கு உரிய பதிலை ஆலை நிர்வாகம் தரவில்லை. மேலும், ஆலைக்கான உரிமம் கடந்த சில ஆண்டுகளாக புதுப்பிக்கப் படவில்லை. எனவே, ஆலைக்கான மின் இணைப்பை மாசு கட்டுப்பாட்டு வாரியம் துண்டித்துள்ளது” என்றார்.

இந்நிலையில், ஆலையின் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

அம்பாசமுத்திரம் தாலுகாவில் மதுரா கோட்ஸ் ஆலை 1880-ம் ஆண்டு முதல் 138 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த ஆலையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுகின்றன.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கையை தொடர்ந்து ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர் மூலமும் ஆலை இயங்கக் கூடாது எனக் கூறியுள்ளனர். இதனால், தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர்.

மதுரா கோட்ஸ் ஆலை சுத்திகரிப்பு விஷயத்தில் அரசுக்கு ஒத்துழைக்கும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்துள்ளன.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை மறு பரிசீலனை செய்து, மின் இணைப்பு வழங்கி, ஆலை உடனடியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x