சிறிய ஆவின் பாலகம் நடத்துவோர் மாதத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சிறிய ஆவின் பாலகம் நடத்துவோரை மாதத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்ய அறிவுறுத்தி வருகிறோம் என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. ஆவின் நிறுவனம், விவசாயிகளிடம் இருந்து தினசரி சராசரியாக 35 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீல நிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதவிர வெண்ணெய், நெய், தயிர், ஐஸ்கிரீம் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரித்து, ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஆவின் பாலங்கள் வாயிலாக மக்களிடம் சேர்க்கப்படுகிறது. ஆவின் பாலகம் நடத்துவோருக்கு குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து, விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். சரியாக விற்பனை செய்யாதவர்களின் பாலகத்தை ரத்துசெய்யும் நடவடிக்கையும் நடைபெறுகிறது.

இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் சுமார் 800 சிறிய ஆவின் பாலகங்களும், சுமார் 200 பெரிய ஆவின் பாலகங்களும் உள்ளன. சிறிய ஆவின் பாலகம் தொடங்க வெறும் 100 சதுரஅடி இடமும் பால் பொருட்களை பாதுகாக்க குளிர்சாதன வசதியும் இருந்தால் போதும். பாலகம் தொடங்க வாய்ப்பு வழங்குவோம்.

சிறிய பாலகம் நடத்துவோருக்கு பால் மட்டுமின்றி நெய், வெண்ணெய், ஜஸ்கிரீம், தயிர் வகைகள், பாதாம் மிக்ஸ், நறுமன பால் உள்ளிட்டவையும் சப்ளை செய்யப்படுகிறது. சிறிய பாலகம் நடத்துவோர் மாதந்தோறும் சராசாரியாக மாதத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்ய அறிவுறுத்தி வருகிறோம்.

அப்போது தான் அவர்கள் வருவாய் ஈட்டமுடியும். சிறிய ஆவின் பாலகம் நடத்துவோரை மாதந்தோறும் கண்காணித்து வருகிறோம். மாதத்துக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை செய்பவர்களை முதலில் அழைத்து அறிவுரை வழங்குவோம். தொடர்ந்து, குறைவாக விற்பனை செய்தால், அவர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம். சென்னையில் நீண்ட காலமாக குறைந்த அளவு விற்பனை செய்துவந்த 20 சிறிய ஆவின் பாலகங்களை கடந்த மாதம் நீக்கிவிட்டு, புதியவருக்கு வாய்ப்பு வழங்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in