Published : 04 Sep 2024 06:24 AM
Last Updated : 04 Sep 2024 06:24 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையலறை கதவு மீது மனிதக் கழிவுகளை வீசியவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
எருமப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் சத்துணவு தயாரிக்கும் சமையலறை அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வந்தபோது, சமையலறை கதவின் பூட்டு மீது மனிதக் கழிவு வீசி எறியப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி, எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மனிதக் கழிவு வீசியவர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு நாமக்கல் மாவட்ட இந்திய மாணவர் சங்கம்கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பள்ளியில் இரவு நேரக் காவலர்களை நியமிக்க வேண்டும், சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
எல்.முருகன் கண்டனம்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவத்தில் 600 நாட்களைக் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை. எருமப்பட்டி பள்ளியைப் போலவே, கடந்த ஆகஸ்ட்மாதம் திருத்தணி மத்தூர் அரசுமேல்நிலைப் பள்ளி கதவில் மனிதக்கழிவு பூசப்பட்டது. இதுபோலபல்வேறு பள்ளிகள், பொதுஇடங்களில் அருவெறுக்கத்தக்க சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளில் தீண்டாமைக் கொடுமை நிலவுகிறது. இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாதது என பல்வேறு அவலங்கள் நீடிக்கின்றன. அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், இரவுக் காவலாளி இல்லாததால், அவை மது அருந்துவோரின் கூடாரமாக மாறி வருகின்றன.
திராவிட மாடல் சாதனை ஆட்சிநடத்துவதாக தற்பெருமை பேசும்திமுகவும், தமிழக முதல்வரும் இதுபோன்ற அவலங்களுக்குஎன்ன பதில் சொல்லப்போகிறார்கள்? இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிப்பதற்கு தகுதியற்றவர்கள். நாகரிகமற்ற இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த நிகழ்வின்பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், உரிய தண்டனை பெற்றுத் தருமாறு வலியுறுத்துகிறேன் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT