

தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் கால தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால், மக்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் 250-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் லட்சக்கணக்கான மக்கள் மின்சார ரயில்களை நம்பியே பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வுக்குப் பிறகு, ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆனால், காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கால அட்டவணைப்படி ரயில்களை இயக்குவதில்லை. சில நேரங்களில் சுமார் 25 நிமிடங்கள் வரையில் இடைவெளி ஏற்படுகிறது என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது: சென்னையில் மின்சார ரயில்களின் சேவை என்பது முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது. ரயில் நிலையங்களில் இருக்கும் கால அட்டவணைப்படி பார்த்தால் 8 முதல் 10 நிமிடங்கள் இடைவெளியில் மின்சார ரயில்களின் சேவை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில நேரங்களில் மின்சார ரயில்சேவைக்காக சுமார் 25 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
காலதாமதம் குறித்து ரயில் நிலையங்களில் எந்த அறிவிப்பும் செய்வதில்லை. அதன்பிறகு வரும் ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதன்பின், ஒன்றுக்கு பின்னால் ஒன்று என அடுத்தடுத்து மின்சார ரயில்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. எனவே, மின்சார ரயில்களின் சேவையை சீராக இயக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தாம்பரத்தில் இருந்து புறப்படும் மின்சார ரயில்களில் பெரிய அளவில் தாமதம் ஏற்படாது. ஆனால், திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்களால் சில நாட்களில் தாமதம் ஏற்படுவது உண்மைதான். தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நடந்துகொண்டு இருக்கும் 3-வது புதிய பாதைப் பணிகள் முடிந்தால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். மேலும், கூடுதலாக மின்சார ரயில்களையும் இயக்க முடியும்’’ என்றனர்.