Published : 02 Jun 2018 08:11 AM
Last Updated : 02 Jun 2018 08:11 AM

பத்திரிகையாளர் மீதான தாக்குதல் கூடாது: அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உறுதி

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாட்டில் சுமார் 56 ஆயிரம் இணையதள செய்தி சேனல்கள் உள்ளன. இவற்றை உருவாக்க உரிமம் எதுவும் தேவையில்லை. இணையதள சேனல்கள் தொடர்பான கொள்கையை உருவாக்க வேண்டுமெனில், அவை இணைந்து ஒரு சங்கத்தை உருவாக்கி, கோரிக்கை விடுத்தால், அதைப் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நாட்டில் நடக்கும் எந்த சம்பவம் குறித்தும் பத்திரிகையாளர்கள் தைரியமாக எழுதலாம். அதை மத்திய அரசு தடுக்காது. சமூகத்தைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசுகள் பல்வேறு விகிதத்தில் வாட் வரி விதிக்கின்றன. வரியைக் குறைக்க மாநில அரசுகள் விரும்பவில்லை. அதனால்தான் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர முடியவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கான மாற்று வழியை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, மாநில அரசின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

2019-ம் ஆண்டில் நாட்டில் 20 மாவட்டங்களில் விளையாட்டுப் பள்ளிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். அங்கு கல்வியுடன், விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அடுத்த 4 ஆண்டுகளில் 150 மாவட்டங்களில் விளையாட்டுப் பள்ளிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x