Published : 26 Jun 2018 10:48 AM
Last Updated : 26 Jun 2018 10:48 AM

மெஸ்ஸி - ரொனால்டோ இடையேதான் போட்டி: திமுக பற்றி ஜெயக்குமார்

திமுக ஆட்சியைப் பிடிக்கவே முடியாது என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அதன் விவரம்:

சட்டப்பேரவையில் ஆளுநர் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்கவில்லை என திங்கள்கிழமை திமுக வெளிநடப்பு செய்திருக்கிறதே?

1995-ம் ஆண்டில் அப்போதைய முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, பேரவைக்குழுவின் விதிகளை தளர்த்தி ஆளுநர் குறித்து விவாதம் நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால், அதன்பிறகு அந்த விதியை யார் நீக்கியது? ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்று சொன்ன திமுக என்ன செய்திருக்க வேண்டும்? அந்த விதிகளை தளர்த்தி விவாதம் நடத்தலாம் என சட்டப்பேரவைக் குழுவில் இருக்கும்போது அந்தக் கதவை மூடியது யார்?

1995-ம் ஆண்டு அந்த விதியை தளர்த்தி விவாதித்தோம். ஆனால், 1999-ம் ஆண்டு அந்தக் கதவை மூடியது யார்? அந்த கதவை மூடியது திமுக. சட்டப்பேரவை விதிகள் குழுவைக் கூட்டி ஆளுநர் பற்றி கூடுமான வரையில் பேசக்கூடாது, விவாதிக்கக் கூடாது என சொன்னது திமுக. அவர்களே மாற்றிவிட்டு இப்போது முரண்பாட்டின் மொத்த உருவமாக  இருப்பதன் மூலம் திமுக எவ்வளவு கில்லாடி என்பதை உணரலாம். ஆளுநரை பற்றி பேசக் கூடாது என்பதை தளர்த்தக் கூடாது என திமுக 1999-ல் பேரவை விதிகள் குழுவைக் கூட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர்களே அந்த கதவை மூடிவிட்டு இப்போது திறக்க வேண்டும் என்றால் என்ன செய்வது?

ஆளுநரின் ஆய்வு எதற்காக? அதை ஏன் தமிழக அரசு எதிர்க்கவில்லை?

இது புளித்துப் போனக் கேள்வி. ஆளுநர் நிர்வாக முறையின் தலைவர். அவர் எந்த அதிகாரிகளுக்கும் உத்தரவிடுவதில்லை. திட்டங்களை நிறைவேற்றுவதில்லை. தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றால் அது எப்படி மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாகும்? அரசு நிர்வாகத்தில் ஆளுநர் எப்போதும் தலையிட்டதில்லை. அரசுக்குள்ள விதிகள், சட்டங்களின்படி அரசு இயங்குகிறது. அவருக்குள்ள அதிகாரத்தின்படி அவர் செயல்படுகிறார்.

திமுக ஆளுங்கட்சியாக இருந்து, அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளுநர் ஆய்வை ஆதரிப்பீர்களா?

அந்த நிலைமை வரவே வராது. திமுக ஆட்சியைப் பிடிக்கவே முடியாது.

ஆட்சியை பிடிப்போம் என கமல்ஹாசன் சொல்கிறாரே. பல புதிய கட்சிகளும் இதனையே சொல்கிறதே...

தற்போது நடைபெற்று வரும் உலக கால்பந்து போட்டியில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவுக்குத் தான் போட்டி. அதுபோல திமுக, அதிமுக இடையில் தான் போட்டி இதில் வேறு யாருக்கும் இடம் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x