Published : 03 Sep 2024 03:54 PM
Last Updated : 03 Sep 2024 03:54 PM
சென்னை: “கன்னியாகுமரி மாவட்டம் செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட மக்களின் வாழ்வாதரமாகவும் இயற்கை அரணாகவும் திகழும் மலையை உடைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும். கனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டும்,” என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகில் செறுகோல் ஊராட்சிக்கு உட்பட்ட இயற்கை எழில்கொஞ்சும் பகுதியான கிழங்குவிளை, புலையன்விளை, கொழிஞ்சிவிளை, காவுவிளை, கடமனங்குழிவிளை, மேடவிளை என 6 கிராமங்களில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியிலுள்ள மலைக்குன்று ஊர்மக்கள் வாழ்வாதாரமாகவும், வேளாண்மைக்கு ஆதாரமாகவும், நீரோடைகளின் பிறப்பிடமாகவும், நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்க வைக்கும் காரணியாகவும், காடுகள் வளர ஏதுவான பகுதியாகவும், விலங்குகள், பறவைகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது.
நான்குவழிச்சாலைப் பணிகளுக்கு என்று கூறி இக்குன்றை உடைத்து மண் மற்றும் பாறைகளைப் பெயர்த்து எடுக்க டிடிகே கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ( TTK Constructions) என்ற நிறுவனம் உண்மைக்குப் புறம்பான சில ஆவணங்கள் மூலம் ஏறத்தாழ 10 ஏக்கர் நிலப்பரப்புக்கு அனுமதி பெற்று, 56,000 கன மீட்டர் மண்ணை வெட்டி எடுக்கத் திட்டமிட்டு சாலை அமைக்கும் பணிகளைத் தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த மலைக்குன்றிலிருந்து 300 மீட்டருக்குள் அதிகப்படியான குடியிருப்புகள், நீர்நிலைகள், விவசாய விளைநிலங்கள், வழிபாட்டுத்தலங்கள், சாலைகள் போன்றவை அமைந்துள்ளதால் பாறைகள் உடைக்கும்போதும், மண் எடுக்கும்போதும் நிலச்சரிவு ஏற்படும் பேராபத்தான சூழல் உள்ளது. மேலும், வீடுகளும் அதிர்வால் பிளவுறும் சூழல் ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் சீர்கேடு, காற்று மாசு ஏற்பட்டுப் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு உட்படப் பல நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி கனிமவளங்களைக் கடத்த அதிகனரக வாகனங்கள் இயக்குவதால் வீடுகள், குறு சாலைகள் சேதமடையவும் வாய்ப்புள்ளது.
செறுகோல் மலைக்குன்றை உடைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி ஏற்கெனவே உள்ளாட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில் பத்மநாபபுரம் கோட்டாட்சியர் மற்றும் திருவட்டார் வட்டாட்சியர் நேரில் கள ஆய்வு செய்து, குவாரி அமைத்து மண் மற்றும் கற்கள் உடைப்பதற்கான அனுமதியை ரத்து செய்வதாக வாய்மொழி வாக்குறுதி அளித்துச்சென்றார்.
ஆனால், மலையை உடைக்க முயலும் டிடிகே கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் நில உரிமையாளர் சிலருடன் சேர்ந்து, மலையை உடைக்க எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைக் கொன்று விடுவதாக தகாத வார்த்தைகள் கூறி மிரட்டுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இயற்கை வளங்களைக் காக்க போராடும் மக்களை வளக்கொள்ளையர்கள் மிரட்டுவதும், அதை அரசும் காவல்துறையும் வேடிக்கைப் பார்ப்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது.
அண்மையில் கேரளாவில் மிகப்பெரிய மண்சரிவு நிகழ்ந்து அதனால் பேரழிவு ஏற்பட்டதைப்போல, தமிழகத்திலும் நிகழ வாய்ப்பிருப்பதாக புவியியல் அறிஞர்கள் எச்சரித்துள்ள நிலையில், இனியும் மலைகளை உடைத்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தமிழக அரசு அனுமதிக்குமாயின் அது வருங்கால தலைமுறைக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். ஆகவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி, செறுகோல் மக்களின் வாழ்வாதரமாகவும் இயற்கை அரணாகவும் திகழும் மலையை உடைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும். கனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT