Published : 24 Aug 2024 06:02 PM
Last Updated : 24 Aug 2024 06:02 PM

“கடவுளுக்கு நிகரான மருத்துவர்களுக்கு விருது வழங்குவது பெருமை” - ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது விழாவில் ‘ரெக்கிட்’ நிறுவன கூட்டாண்மை இயக்குநர் ரவி பட்னாகர் பெருமிதம்

மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை-மருத்துவ நட்சத்திரம் 2024’ விருதுகள் வழங்கும் விழா மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரெக்கிட் நிறுவன வெளி விவகாரங்கள் மற்றும் கூட்டாண்மை இயக்குநர் ரவி பட்னாகருக்கு, ‘இந்து தமிழ் திசை’ தலைமை செயல் அதிகாரி சங்கர்  வி.சுப்பிரமணியம் நினைவு பரிசு வழங்கினார். உடன் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் கே.எம்.அபுல்ஹசன், செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு, பொருளாளர் எஸ்.கவுரிசங்கர்.  படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: ‘‘கடவுளுக்கு நிகரான மருத்துவர்களுக்கு விருது வழங்குவது பெருமையாக உள்ளது, ’’ என்று ‘ரெக்கிட்’ நிறுவன வெளி விவகாரங்கள் மற்றும் கூட்டாண்மை இயக்குநர் கூட்டாண்மை இயக்குநர் ரவி பட்னாகர் பெருமிதம் தெரிவித்தார்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில், மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் ஆற்றிவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த மூன்றாண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், நான்காவது ஆண்டாக ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2024’ விருதுகள் வழங்கும் விழா, மதுரை காமராஜர் சாலையிலுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடந்தது. இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு (ஐஎம்ஏ), ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் இணைந்து நடத்தின.

விழாவில் சிறப்பு விருந்தினராக ரெக்கிட் நிறுவன வெளி விவகாரங்கள் மற்றும் கூட்டாண்மை இயக்குநர் ரவி பட்னாகர் பங்கேற்றார். அப்போது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த 70 மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

‘இந்து தமிழ் திசை’ தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்பிரமணியம், சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகத்தை நினைவு பரிசு வழங்கி பேசினார். தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் கே.எம்.அபுல் ஹசன், மதிப்புறு மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு, மதிப்புறு நிதிச்செயலாளர் எஸ்.கவுரி சங்கர் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், சுத்தம், சுகாதாரம் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 13 வாரம் வெளியான விழிப்புணர்வு தொடரில் அதிக மாணவ, மாணவிகளை பங்கேற்க செய்தமைக்காக வேலூர் மாவட்டம், பத்தலப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன் திருவள்ளுவனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடிய மதுரை திருஞானம் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியருக்கு புத்தகங்கள் பரிசு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் ரெக்கிட் நிறுவன வெளி விவகாரங்கள் மற்றும் கூட்டாண்மை இயக்குநர் ரவி பட்னாகர் பேசுகையில், ‘‘உலக வங்கி உதவியுடன் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் சில கடலோரமாவட்டங்களில் நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் பணிபுரிந்துள்ளேன். அந்த காலக்கட்டங்களில் நான் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இணைந்து, பணியாற்றியது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். உலக வங்கியுடன் இணைந்து 10 ஆண்டுகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றியது நிறைய அனுபவங்களை எனக்கு கொடுத்தது. சமூகப்பொறுப்புள்ள நிறுவனங்களால் மட்டுமே வெற்றிப் பெற முடியும் என்பதை நம்புகிறவன். அதனால் நான் சமூகத்திற்கு நன்மை பயங்கும் முயற்சிகள், விளிம்புநிலை மக்களை மேம்படுத்துல் போன்ற பணிகளில் மிகுந்த ஆர்வமாக ஈடுபட்டு வருகிறேன்.

ஏஆர்டி போன்ற முக்கிய மருந்துகளை இந்தியாவில் நிறைய உற்பத்தி செய்கிறார்கள். அந்த மருந்துகள் விலையை குறைக்க பங்கு ஆற்றியுள்ளேன். உலகளவில் 5 கண்டங்களில் பல்வேறு நாடுகளில் மருத்துவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன். கடவுளுக்கு நிகராக போற்றப்படும் மருத்துவர்களுக்கு விருது வழங்குவது பெருமையாக உள்ளது. மருத்துவர்கள் இந்த சமூகத்திற்கும் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார்கள். நிறைய சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்கள். இதுபோன்ற தருணங்களில் கவுரவிக்கப்பட வேண்டும், ’’ என்றார்.

இந்திய மருத்துவ சங்கம் தலைவர் டாக்டர் அபுல் ஹசன் பேசுகையில், ‘‘மருத்துவ உலகம் எப்போதும் பதட்டமானது. மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடைவெளி உள்ளது என தற்போது சமூகம் கருதுகிறது. சமூக வலைத்தளங்களிலும் எதிர்மறையான தகவல்களை வெளியிடுகின்றனர். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மருத்துவத்துறை இன்று மனிதனின் ஆயுளை நீட்டித்துள்ளது. நம்மை சுற்றிலும் எதிர் மறையான தகவல்களே பரவுகிறது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சரியான நேரத்தில் நமக்கு தோள் கொடுக்கிறது. நமக்கு அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கிறது. இது நமது பணிக்கு கூடுதல் உத்வேகமாக உள்ளது. நாமும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு உறுது ணையாக இருக்க வேண்டும், ’’ என்றார்.

இந்திய மருத்துவ சங்கம் செயலாளர் கார்த்திக் பிரபு பேசுகையில், ‘‘தற்போது மருத்துவத்துறையில் தமிழகத்தில் 50க்கும் குறைவான படுக்கை வசதியை கொண்ட 7,500 தனியார் மருத்துவமனைகள், 50க்கும் அதிகமான படுக்கை வசதியை கொண்ட 700 தனியார் மருத்துவமனைகள், அரசு, மற்றும் தனியார் சார்பில் 35 ஆயிரம் புறநோயாளிகள் மையங்கள் செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகள், கிராமங்கள், நகரங்கள் வேறுபாடில்லாமல் மக்களுடைய ஆரோக்கியத்திற்கும் மிகுந்த உதவியாக உள்ளது. தமிழகத்தில் மருத்துவத்துறையும், அதன் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுவதற்கு தனியார் மருத்துவமனைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது, ’’ என்றார்.

இவ்விழாவில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் மதுரை செய்தி ஆசிரியர் எஸ்.ஸ்ரீனிவாசகன் பேசினார். முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் விழாவை தொகுத்து வழங்கினார். ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x