மின் கட்டண உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் இண்டியா கூட்டணி கட்சிகள் முற்றுகைப் போராட்டம்

படங்கள்- எம். சாம்ராஜ்.
படங்கள்- எம். சாம்ராஜ்.
Updated on
2 min read

புதுச்சேரி: மின் கட்டண உயர்வுக்கு எதிராக இண்டியா கூட்டணி கட்சியினர் கூட்டாக புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை தடுப்புகளை வைத்து போலீஸார் தடுத்ததால் முக்கியத் தலைவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மின்கட்டணம் உயர்ந்துள்ளது. வழக்கமாக ஏப்ரலில் மின்கட்டணம் உயர்வு அமலுக்கு வரும். அதுபோல் இந்த ஆண்டும் ஏப்ரலில் முன் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன், மக்களவைத் தேர்தலும் வந்ததால் மின்கட்டண உயர்வு புதுச்சேரி அரசால் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் ஜூன் 16-ம் தேதி முன்தேதியிட்டு புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதற்கு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து மின்கட்டண உயர்வுக்கு எதிராக இண்டியா கூட்டணிக் கட்சிகள் தனித்தனியாக போராட்டங்களை அறிவித்தனர். இதனால் பல கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்ததால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர்.

இதன்படி இன்று (செப்.2, திங்கள்கிழமை) இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிபிஐ (எம்-எல்) ஆகிய கட்சிகள் சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட அண்ணா சிலை அருகே நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்று கூடினர்.

அங்கிருந்து தலைமைச் செயலகம் நோக்கி தொடங்கிய ஊர்வலத்துக்கு திமுக மாநில அமைப்பாளர் சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவபொழிலன், சிபிஐ (எம்-எல்) புருஷோத்தமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஊர்வலம் அண்ணாசாலை, நேருவீதி வழியாக தலைமைச் செயலகத்தை நோக்கிச் சென்றது. அப்போது போலீஸார் அவர்களை நேருவீதி, கேன்டின் வீதி சந்திப்பு அருகே தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு கட்டத்தில் திடீரென தடுப்புகளைத் தள்ளினர். மறுபுறம் போலீஸார் தடுத்தனர்.

இருப்பினும் போராட்டக்காரர்கள் அதிகமாக இருந்ததால் தடுப்புகளைத் தள்ளி வேகமாக முன்னேறினர். போலீஸார் அவர்களை தடுத்தனர். இதனால் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.

போராட்டத்தால் நகரெங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in