‘வாழை’ படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: காலை உணவுத் திட்டத்தை சுட்டிக்காட்டி மகிழ்ச்சி

‘வாழை’ படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: காலை உணவுத் திட்டத்தை சுட்டிக்காட்டி மகிழ்ச்சி
Updated on
1 min read

சான்ஃப்ரான்சிஸ்கோ: ‘வாழை' திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள்

பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!

தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியானது 'வாழை'. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். நடிகர் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சிலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பலத்த வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘வாழை' திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ரூ.1300 கோடி முதலீடுகள் ஈர்ப்பு: தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் இதுவரை 8 நிறுவனங்களுடன் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 1300 கோடி ரூபாய் முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமெரிக்கப் பயணம் பற்றி முதல்வர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்! தங்களது உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்!” எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in