

மதுரை: தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ‘டீன்’ பணியிடம் காலியாக உள்ளதால், நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. எனவே, 14 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நிரந்தரமாக டீன்-களை நியமிக்க வேண்டும் என்று மருத்துவப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அடுத்து, அதிக அளவு நோயாளிகள் வரும் மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலு ஓய்வுபெற்றார். தற்போதுவரை புதிய டீன் நியமிக்கப்படவில்லை.
பொறுப்பு டீனாக நியமிக்கப்பட்டிருந்த பேராசிரியர் தர்மராஜும் நேற்று ஓய்வு பெற்றார். தற்போது இதயவியல் துறை பேராசிரியர் செல்வராணி பொறுப்பு டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாதங்களாக பொறுப்பு டீன் மூலமே மருத்துவமனை நிர்வாகத்தை சமாளித்து வருகின்றனர். இதேபோல, தமிழகத்தின் பல முக்கிய மருத்துவமனைகளில் டீன் பணியிடம் காலியாகவே உள்ளது.
இதுகுறித்து மருத்துவத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி உட்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைகளில் ‘டீன்’ பணியிடம் காலியாக உள்ளது.
இந்தப் பணியிடங்களில் தற்போது ‘பொறுப்பு’ டீன்களை கொண்டு நிர்வாகம் நடத்தப்படுகிறது. இந்தப் பணியிடங்களை நிரப்ப தகுதிப் பட்டியல் தயார் செய்ய வேண்டும். ஆனால், இதில் உயர்மட்டத்தில் யாரும் அக்கறை செலுத்தாததால், தகுதிப் பட்டியல் தயாரிப்பு பணி மந்தமாக நடக்கிறது.
இந்தப் பட்டியலில் வேண்டியவர்களை நுழைக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.இதை சுகாதாரத் துறை அமைச்சர்,செயலர் கவனத்துக்கு அதிகாரிகளால் கொண்டு செல்ல முடியவில்லை. அமைச்சரும், செயலரும் மனதுவைத்தால் ஒரே நாளில் தகுதிப் பட்டியலை இறுதிசெய்து, டீன்களை நியமிக்கலாம்.
அரசு மருத்துவமனைகளில் நிரந்தர டீன் இருந்தால் மட்டுமே, மூத்த பேராசிரியர்கள், மருத்துவர்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, நிர்வாகத்தை கட்டுக்கோப்பாக நடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
தாமதம் ஏன்? - இதுகுறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘இன்னும் ஒரு வாரத்தில் ‘டீன்’ பதவிக்கான தகுதிப் பட்டியல் தயாராகிவிடும். பின்னர், காலியாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய டீன்கள் நியமிக்கப்படுவர். நிரந்தரடீன் இல்லாவிட்டாலும், நிர்வாகப்பொறுப்பு, அனுபவம் மிக்க மூத்தபேராசிரியர்களை பொறுப்பு டீனாகநியமித்து, அரசு மருத்துவமனைகளின் நிர்வாகம் தடையின்றி நடந்து வருகிறது’’ என்றார்.