Published : 13 Apr 2014 01:50 PM
Last Updated : 13 Apr 2014 01:50 PM

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்திடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 24-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் சனிக்கிழமை காலை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் ஆலோசனை நடத்தினார். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு கட்சிப் பிரதிநிதிகளையும் ஆணையர் சம்பத், தனித்தனியாக சந்தித்து பேசினார். காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.

தேர்தல் ஆணையரிடம் பேசியது குறித்து கட்சிப் பிரதிநிதி கள் கூறியதாவது:

முன்னாள் எம்.பி. சண்முக சுந்தரம் (திமுக): தேர்தல் விதிகளை மீறும் ஆளும்கட்சியின் செயல்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கினோம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, எதிர்க்கட்சி தலைவர் கள் மீது சரமாரியாக புகார் கூறுவது, அவதூறாகப் பேசுவது குறித்தும் தெரிவித்துள்ளோம். தேர்தல் அதிகாரி இல்லாமலேயே போலீஸார் வாகனங்களை சோதனை செய்வது பற்றியும் கூறினோம். சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதாகக் தெரிவித்துள்ளனர்.

திலீப்குமார் (தேமுதிக): நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஓட்டுக்கு அதிகமாகப் பணம் கொடுக்கப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பணம் கொடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். பணம் கொடுப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் தேர்தலில் போட்டியிடாத வகையில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தோம். முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு அடுத்த 3 நாட்களில் வெளியிடப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தமிழகத்தில் தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): தேர்தல் அதிகாரிகள், அலுவலர்களின் அணுகுமுறை நன்றாக இருக்கிறது. ஆனால் கட்சிக் கூட்டங்கள், பிரச்சாரத்துக்கு போலீஸ் மற்றும் தேர்தல் அதிகாரி என 2 இடங்களில் அனுமதி கேட்க வேண்டியுள்ளது. தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்றாலே போதும் என்ற நிலையை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): கடந்த 4 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து ஆராய வலியுறுத்தி உள்ளோம். தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்றாலே போதும் என்ற நிலையை உருவாக்க வேண்டுமென கேட்டோம். தேர்தல் ஆணையரும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி வாங்கினாலே போதும் என்று தெரிவித்துள்ளார்.

நாகலட்சுமி (பகுஜன் சமாஜ் கட்சி): பூத் சிலிப்களை அரசியல் கட்சிகளே கொடுக்க அனுமதிக்கக் கூடாது. இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையமே, பூத் சிலிப்களை வழங்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிமுக சார்பில் மைத்ரேயன் எம்.பி., பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ பங்கேற்றனர். அவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்காமல் வேகமாகச் சென்றுவிட்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணைய டைரக்டர் ஜெனரல்கள் பி.கே.தாஸ், அக் ஷய் ராவத், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அனைத்துக் கட்சி கூட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி., ஐ.ஜி. ஆகியோருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர், உள்துறைச் முதன்மைச் செயலாளர், டி.ஜி.பி. (தேர்தல்) மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடனும் பின்னர் வருமானவரித் துறை, மத்திய கலால் துறை கமிஷனர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x