Published : 31 Aug 2024 04:30 AM
Last Updated : 31 Aug 2024 04:30 AM
சென்னை: மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை தூய்மைப் பணிகளை தனியாரிடம் வழங்க இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரைக்கு தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.
வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள்,விழாக் காலங்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் குவிகின்றனர். இதற்குஇணையாக பெசன்ட்நகர் எலியட்ஸ்கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்கள் வருவதற்கு ஏற்ப, உணவகங்களின் எண்ணிக்கையும் 1500-க்கு மேல் அதிகரித்துள்ளது. கண்காணிப்பு இல்லாததாலும், பொதுமக்களின் அலட்சியத்தாலும் தினமும் இக்கடற்கரைகள் குப்பை சிதறல்களாக காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் மெரினா மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகியவற்றில் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய இரு மண்டலங்களில்தூய்மைப் பணி தனியாருக்கு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதோடுமெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளின் தூய்மைப் பணியும் தனியாரிடம் வழங்கப்பட உள்ளது.
மேலும், கனரக வாகனங்களைக் கொண்டு கடற்கரைகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். வார இறுதி நாட்களில் மெரினா வளைவு சாலைக்கு அதிக அளவில் மக்கள் வருவதால், அவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து தெரு விளக்கு கம்பங்களிலும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT