Published : 31 Aug 2024 04:30 AM
Last Updated : 31 Aug 2024 04:30 AM

தமிழகத்தில் இயங்கிவரும் நிறுவனங்களுடன் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம்: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

மறைந்த ஜி.கே. மூப்பனார் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அருகில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தலைமை நிலைய நிர்வாகி ஜி.ஆர்.வெங்கடேஷ். பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள். படம்: ம.பிரபு

சென்னை: அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களுடன்தான் ஒப்பந்தம் செய்துள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

மூப்பனார் நினைவு தினத்தையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நினைவிடத்தில் பாஜகமாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மூப்பனாரைப் போல நாகரிகமான அரசியலை ஜி.கே.வாசன் முன்னெடுத்து வருகிறார்.

பிரதமர் மோடி உலக நாடுகளுக்கெல்லாம் சென்று, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கெனவேதமிழகத்தில் இயங்கிவரும் நிறுவனங்கள்தான். எதுவும் புதிய நிறுவனங்கள் கிடையாது. எனவே மக்களுக்கு அனைத்தையும் விவரமாக முதல்வர் சொல்ல வேண்டும்.

‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டம் என்பது ஏற்கெனவே இருக்கும் நமது கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதற்காக கூடுதலான திட்டம். அதற்கு கூடுதலான ஆசிரியர்களை நியமிப்பார்கள்.

ஆனால், திமுக அரசு, அந்ததிட்டத்தைப் பின்பற்றாமல், அதற்கான செலவை மட்டும் கேட்கிறது. இதைத்தான் மத்திய அரசு கேள்விகேட்கிறதே தவிர, வழக்கமாக வழங்கும் கல்விக்கான ஒதுக்கீட்டை அவர்கள் நிறுத்தவில்லை. அரசியல் காரணங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x