Published : 31 Aug 2024 05:15 AM
Last Updated : 31 Aug 2024 05:15 AM

அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை; தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து செப்.3-ல் ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு

சென்னை: பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் செப்.3-ம் தேதி செம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், கவுரிவாக்கம் ஆகிய இடங்களில் 5,100 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாததால் தாய்மார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதாள சாக்கடை திட்டம்? - அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 17 பூங்காக்கள் முறையாக பராமரிப்பின்றி உள்ளன. 15 இடங்களில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. அதன் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கவில்லை. குடிநீர் வழங்கும் டேங்குகளும் பராமரிப்பின்றி உள்ளன. அம்மா உணவகங்களுக்கு போதிய மளிகைப் பொருட்களை வழங்கவில்லை. அங்கு பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றாத தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் செப்.3-ம் தேதி மாலை 4 மணிக்கு செம்பாக்கம் காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டம் கட்சியின் மகளிரணி தலைவி பா.வளர்மதி தலைமையிலும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டிகே.எம். சின்னையா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x