

சென்னை: சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வும், அதிக வல்லுநர்களும் தேவை என்று தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தெரிவித்துள்ளார்.
தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ), தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் சைபர் பாதுகாப்பு குறித்த தேசிய கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது.
தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சிமையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் குமார் ஜெயந்த், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் அவர்கள் பேசியதாவது: ஆராய்ச்சி மைய இயக்குநர் காளிராஜ்: சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த காவல் துறைநடவடிக்கை மட்டுமே போதாது.மக்களுக்கு சரியான விழிப்புணர்வு தேவை. இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடந்தாலும், புகார்கள் குறைவாகவே வருகின்றன.
மக்களுக்கு தங்களது தகவல்கள் பாதுகாக்கப்படுமா என்ற பயம் இருக்கிறது. இந்தியாவில் புகார் அளிப்பவர்களின் தகவல்கள் கட்டாயம் பாதுகாக்கப்படும். எனவே, பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார்களை பதிவுசெய்ய வேண்டும்.
சிஇஐஆர், சிஎன்ஏபி: செல்போன் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்களை தடுக்க, மத்தியசாதன அடையாள பதிவு (சிஇஐஆர்), காலர்நேம் பிரசன்டேஷன் (சிஎன்ஏபி) போன்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தவிர, சைபர் குற்றங்களை தடுக்க, தொழில்நுட்ப வல்லுநர்களும் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். மாணவர்கள் இடையே இணைய தன்னார்வலர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
நீதிபதி கே.என்.பாஷா: இந்தியா வளரும் நாடாக இருந்தாலும், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பல துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் முக்கிய காரணம். அதேநேரம், அதீத தொழில்நுட்ப வளர்ச்சியும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
துறை செயலர் குமார் ஜெயந்த்: இளைஞர்கள் சைபர் குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக சம்பாதிக்கும்போது அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஆபத்தை உணர்ந்து சமூகத்தில் அதற்கேற்ப பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்.
ஆசையை தூண்டிபணம் பறிக்க நினைக்கும் கும்பலிடம் இருந்து அழைப்பு வருவதாக தெரியவந்தால், அதை உடனே நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். கலாநிதி வீராசாமி எம்.பி., தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம், பதிவாளர் ஜி.ஆர்.செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.