அயனாவரம் - ஓட்டேரி இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

அயனாவரம் - ஓட்டேரி இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ நீளத்துக்கு 3 வழித்தடங்களில் கட்டி முடிக்கதிட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில், வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட்வரை 45.4 கி.மீ தூரத்துக்கு பணிகள் நடைபெறுகின்றன.

இதில், 19 மேம்பால மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கமெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. வழித்தடம் 5-ல் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ நீளத்தில் 39 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 6 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்நிலையில், வழித்தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்துக்கு சுரங்கப் பாதைகட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சுரங்கம் தோண்டும் இயந்திரம் `கொல்லிஸ்', கடந்த ஆண்டு ஜுலை 11-ம் தேதியன்று அயனாவரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 903 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதை பணியை முடித்துவிட்டு நேற்று ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது.

டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தால் இதுவரை 6 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தனது பணியை நிறைவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணியை நிறைவு செய்துள்ளன.

அயனாவரம் மற்றும் ஓட்டேரிக்கு இடையிலான சுரங்கப் பாதை பிரிவு, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாகும், இதில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொல்லிஸின் முதல் 500 மீட்டர் சுரங்கப் பாதை இயக்கம் கூர்மையான 220 மீட்டர் ஆரம் வளைவுடனும், கடைசி 200 மீட்டர் சுரங்கப் பாதை இயக்கம் 280 மீட்டர் ஆரம் வளைவுகளுடன் பணியை நிறைவு செய்தது.

மேலும், இந்த சுரங்கப் பாதை இயக்கமானது, மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் கடந்து செல்வது போன்ற பெரும் சவால்களையும், 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை எதிர்கொண்டும், மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்துள்ளது. இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in