Published : 15 Jun 2018 09:24 PM
Last Updated : 15 Jun 2018 09:24 PM

கபினி அணை திறப்பு: மூடிக்கிடக்கும் பல கதவுகளை இரு மாநிலங்களும் திறக்க வேண்டும்: கமல் ஹாசன் கருத்து

கர்நாடகத்தில் கபினி அணை திறக்கப்பட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம்கட்சியின் தலைவர் கமல் ஹாசன், இருமாநிலங்களுக்கு இடையிலான நல்ல நட்புதான் மூடிக்கிடக்கும் பல கதவுகளை திறக்கும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த மே மாத இறுதியில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

குடகு மாவட்ட மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல, கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதிகளில் தொடரும் மழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,021 கன அடி நீர், மதகுகள் மூலமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர், பிலிகுண்டுலு வழியாக தமிழகத்தை அடைந்து ஒகேனேக்கல் மூலம் விரைவில் மேட்டூர் அணையும் வந்தடையும்.

வயநாட்டில் கனமழை தொடர்வதால், கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இன்று அல்லது நாளை கபினி அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அணை முழு கொள்ளளவை எட்டும்பட்சத்தில், அணைக்கு வரும் மொத்த நீர்வரத்தும் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும்.

இது குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில், கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியிடம் அணை திறப்பை பற்றி பேசி இருந்தேன். கபினி அணையை கர்நாடக அரசு திறந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. காவிரி மேம்பாட்டு ஆணையம் கூட செயல்படத் தொடங்கி இருக்கிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்ல எண்ணம், நட்புதான் மூடிக்கிடக்கும் பல கதவுகளை திறக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x