வார இறுதிநாட்கள் - 1,105 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு

சிறப்பு பேருந்துகள்
சிறப்பு பேருந்துகள்
Updated on
1 min read

சென்னை: வார இறுதிநாட்களையொட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1,105 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆக.31 மற்றும் செப்.1 வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 715 பேருந்துகளும், சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 150 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 40 பேருந்துகளும் இயக்கப்படும்.

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 1,105 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில் பயணிக்க சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். அதேசமயம், திங்களன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கு அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in