

சென்னை: சேவைக்குறைபாடு புகார்கள் காரணமாக, சென்னையில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் நீண்டகாலமாக பணியாற்றும் 44 தற்காலிக தரவு உள்ளீட்டாளர்களை வேறு இடங்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று (ஆக.29) வெளியிட்ட செய்திக்குறிபபு: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஒரு அரசு துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் மூலம 530 அரசு இ-சேவை மையங்கள் மற்றும் 328 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு இ- சேவை மையங்கள் மூலம் வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்கள் மற்றும் சமுக நலன் சார்ந்த 170-க்கும் மேற்பட்ட சேவைகளை ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல், நிரந்த ஆதார் சேர்க்கை மையங்கள் மூலம் புதிய ஆதார் பதிவுகள் மற்றும் ஆதார் திருத்தங்கள் போன்ற சேவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாவட்டத்தில் தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள், மற்றும் கோட்டம், வார்டு அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வெளிமுகமை நிறுவனம் மூலம் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் தரவு உள்ளீட்டாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் குறைபாடுகள் உள்ளதாக அரசின் கவனத்துக்கு வந்தது.
பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சேவை வழங்க ஏதுவாக, தற்போது சென்னை மாவட்டத்தில் ஒரே இடத்தில் நீண்ட காலமாகப் பணிபுரிந்து வரும் 44 அரசு இ-சேவை மையங்களைச் சார்ந்த முற்றிலும் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தரவு உள்ளீட்டாளர்களை சென்னை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்படும் அரசு இ-சேவை மையங்களுக்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.