Published : 29 Aug 2024 06:12 AM
Last Updated : 29 Aug 2024 06:12 AM

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மின்வாரிய முன்னெச்சரிக்கை பராமரிப்பு பணிகள்: அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார்.

எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துதல் குறித்துகாணொலிக் காட்சி மூலமாக அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதுவரை அறிவிக்கப்பட்ட 108அறிவிப்புகளில், 1.50 லட்சம் இலவசவிவசாய மின் இணைப்புகள் வழங்குதல், 3 புதிய மின்பகிர்மானமண்டலங்கள் அமைத்தல், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி மற்றும் சுசீந்திரம் தாணுமாலயன் ஆகிய கோயில்களின் தேரோடும் வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைத்தல் உள்ளிட்ட 28 முக்கிய அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 78 அறிவிப்புகளுக்கான பணிகள் பல்வேறு நிலைகளில் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைவாக முடிப்பதற்கு தேவையான தளவாடபொருட்கள் மற்றும் மின்சாதனங்களை கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை விரைந்துமுடித்து குறித்த காலத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்காகவும் கடந்த ஜுலை 1-ம் தேதிமுதல் ஒருங்கிணைந்த பராமரிப்பு பணிகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள், இன்றைய நிலவரப்படி 31,328 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. சாய்ந்த நிலையில் இருந்த 24,943மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. 1.53 லட்சம் இடங்களில் பலவீனமான இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டுள்ளன. சுமார் 1,259 கி.மீ. தூரத்துக்கு மின்கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 88 பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பராமரிப்பு பணிகளை ஒருமாத காலத்துக்குள் விரைந்து முடிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், இணை மேலாண்இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், கு. இந்திராணி (இயக்குநர், பகிர்மானம்), அனைத்து இயக்குநர்கள், தலைமைப் பொறியாளர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x