Published : 29 Aug 2024 05:45 AM
Last Updated : 29 Aug 2024 05:45 AM
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதையொட்டி, வரும் செப். 23-ம் தேதி மாநாடு நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு செயல்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக, நடிகர் விஜய், அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் முதல் மாநாட்டை திருச்சியில் நடத்த முடிவெடுத்து, அங்கு ரயில்வே துறைக்குச் சொந்தமான இடம் கேட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு கடிதம் அளித்தனர். ஆனால், அங்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, விக்கிரவாண்டி அருகேஉள்ள வி.சாலை புறவழிச் சாலையில், தனியாருக்குச் சொந்தமான 85 ஏக்கர் இடத்தில் கட்சியின் முதல்மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று கூடுதல் ண்காணிப்பாளர் திருமாலிடம், மாநாடு நடத்த அனுமதி வேண்டிமனு அளித்தார்.
அந்த மனுவில், “எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டை,விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் வரும் செப். 23-ம் தேதி நடத்ததிட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். இந்த மாநாட்டில் எங்கள் கட்சித்தலைவர் விஜய் கலந்து கொள்கிறார். காவல் துறை சார்பில் உரியபாதுகாப்பு அளித்து, மாநாடு நடத்துவதற்கான அனுமதியை அளிக்க வேண்டுகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட புஸ்ஸி ஆனந்த்செய்தியாளர்களிடம் கூறும்போது, "விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தஅனுமதி வேண்டி காவல் துறையிடம் மனு கொடுத்துள்ளோம். மாநாடு நடைபெறும் தேதியை, கட்சித் தலைவர் விஜய் முறைப்படி அறிவிப்பார்” என்றார்.
திருச்சியில் மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, புஸ்ஸி ஆனந்த் எந்த பதிலும் சொல்லவில்லை.
தவெக மாநாட்டுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில், 2021-ல்அதிமுக சார்பில் மாநாடு நடத்த முன்னாள் அமைச்சர் சண்முகம் பூஜைகள் செய்து, பணியைத் தொடங்கினார். ஆனால், அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், மாநாடு நடைபெறவில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் தேர்தலில் திமுக சார்பில் கடலுார், விழுப்புரம் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், இந்த இடத்தில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த இடத்தில் மாநாடு நடத்தினால், சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியினர் வந்து செல்ல வசதியாக இருக்கும் என்று தமிழகவெற்றிக் கழகத்தினர் கருதுகின்றனர். ஒரு தொகுதிக்கு 1,000 தொண்டர்கள் என்றாலும், 234 தொகுதியில் இருந்து 2.34 லட்சம் தொண்டர்கள் மற்றும் நடிகரைக் காணவரும் 50 ஆயிரம் பேர் எனசுமார் 3 லட்சம் பேர் இந்த மாநாட்டில் திரள வாய்ப்புள்ளது.
ஏடிஎஸ்பி ஆய்வு: இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் விழுப்புரம் ஏடிஎஸ்பி திருமால், விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த அனுமதி கோரிஉள்ள இடத்தைப் பார்வையிட்டார். அங்கு வாகனங்கள் நிறுத்த போதுமான இடவசதி உள்ளதா, தமிழ்நாடுமுழுவதும் இருந்து வரும் கட்சித்தொண்டர்கள் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து, இது தொடர்பான அறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பிவைக்க உள்ளதாகத் தெரிகிறது. ஆய்வின்போது, விழுப்புரம்டிஎஸ்பி சுரேஷ், காவல் ஆய்வாளர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழக மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்லிஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT