Published : 09 Jun 2018 07:35 AM
Last Updated : 09 Jun 2018 07:35 AM

நீர்வரத்து குறைவாக இருப்பதால் ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படாது; ரூ.115 கோடியில் குறுவை தொகுப்பு திட்டம்: டெல்டா விவசாயிகளுக்கான சலுகைகளை முதல்வர் பழனிசாமி அறிவித்தார்

நீர்வரத்து குறைவாக இருப்பதால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் விவசாயிகளுக்காக ரூ.115 கோடியே 67 லட்சத்தில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருந்தால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்படும். இதன்மூலம் 3 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறும். போதிய நீர் இல்லாததால் கடந்த 6 ஆண்டுகளாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

ஆனாலும், டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை சாகுபடி செய்ய, கடந்த 2012-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கினார். 2013-ல் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்தினார். அதுபோல, கடந்த ஆண்டில் ரூ.56 கோடியே 92 லட்சம் செலவில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

காவிரி நீருக்காக அழுத்தம்

தமிழக அரசு நடத்திய சட்டப் போராட்டத்தால் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த அமைப்புகளை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள், கடந்த 6-ம் தேதி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து எனது கடிதத்தை அளித்தனர். தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைக்கும் வரை மத்திய அரசுக்கு அதிமுக அரசு அழுத்தம் கொடுக்கும்.

தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 39.42 அடி மட்டுமே உள்ளது. வினாடிக்கு 2,190 கன அடி மட்டுமே நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12-ம் தேதி அணையை திறக்க இயலாது. எனவே, நிலத்தடி நீர் மூலம் சாகுபடி செய்ய ஏதுவாக குறுவை தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

மும்முனை மின்சாரம்

அதன்படி, டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். 79,285 ஏக்கரில் அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை சாகுபடி செய்ய ஏதுவாக, குவிண்டாலுக்கு ரூ.1,750 வீதம் 15,857 குவிண்டால் நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்படும்.

மேலும் 850 பவர் டில்லர்கள், 860 ரோட்டவேட்டர்களை 50 சதவீத மானிய விலையில் வழங்க ரூ.11 கோடியே 94 லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கப்படும். 90 சதவீத மானியத்தில் 500 சூரிய மின்சக்தி மோட்டார் பம்பு செட்கள் நிறுவ ரூ.22 கோடியே 50 லட்சம் வழங்கப்படும். மின் இணைப்பு கிடைக்காத விவசாயிகளுக்கு 2 ஆயிரம் டீசல் இன்ஜின்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும். இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கப்படும். இதற்கு அரசின் உழவன் கைபேசி செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.

இயந்திரங்கள் மூலம் நடவு செய்ய ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். இதற்காக ரூ.40 கோடி செலவிடப்படும். 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நெல் நுண்ணூட்டக் கலவை வழங்கப்படும். துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்த பின்னேற்பு மானியமாக 80 ஆயிரம் ஏக்கருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1 கோடியே 60 லட்சம் வழங்கப்படும். ஜிப்சம் பயன்படுத்த 30 ஆயிரம் ஏக்கருக்கு தலா ரூ.600 வீதம் ரூ.1 கோடியே 80 லட்சம் வழங்கப்படும்.

விதைகள், உரங்கள்

குறைந்த நாட்களில், குறைந்த நீரில் அதிக மகசூல் தரும் பயிர் வகைகளை 12,500 ஏக்கரில் சாகுபடி செய்ய மானிய விலையில் விதைகள், உரங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடியே 13 லட்சம் ஒதுக்கப்படும். 2 ஆயிரம் தெளிப்பு நீர் பாசன அமைப்புகளை நிறுவ ரூ.1 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்படும். பசுந்தாள் உர பயிர் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.1,200 வீதம் 15 ஆயிரம் ஏக்கருக்கு பசுந்தாளுர பயிர் விதைகள் வழங்கப்படும். நிலத்தடி நீரை சிக்கனமாகப் பயன்படுத்த பிவிசி குழாய்கள் கொண்ட 1,500 யூனிட்கள் அமைக்க தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.2 கோடியே 25 லட்சம் ஒதுக்கப்படும்.

வேளாண் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை வழங்க ரூ.24 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்படும். மொத்தமாக ரூ.115 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதிமுக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் விரைவில் மேட்டூர் அணை பாசனத்துக்காக திறக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x