“தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம், சென்னையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும்” - அமைச்சர்

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் | கோப்புப்படம்
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகமும், சென்னை சேப்பாக்கம் ஹூமாயூன் மகாலில் சுதந்திர தின அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.

சென்னை தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அருங்காட்சியகங்கள் துறை சார்பில், இன்று (ஆக.28) சென்னை அருங்காட்சியகத்தில் ‘பண்பாடு - ஒரு மீள்பார்வை’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: “சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பெருநகர சென்னையின் பெருமையைப் பேசும் விதமாக ‘சென்னை தினம்’ கொண்டாடப்படுகிறது. கடந்த 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி தற்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள நிலப் பரப்பை ஆங்கிலேயர்கள் வாங்கினார்கள். அந்த நாள் இதுவரை சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் சென்னையின் 385 -வது பிறந்த நாளை பெருமையாக அருங்காட்சியகம் கொண்டாடி வருகிறது. இதற்காக ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை சிறப்புக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்புக் கண்காட்சியில் சென்னை 385 ஆண்டு மட்டும் பழமையானதல்ல, லட்சக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக லட்சக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ராபர்ட் ஃபுரூஸ் ஃபுட் கண்டெடுத்த பழைய கற்கால கருவிகள், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழ்ப்பாக்கம் அகழாய்வில் கிடைத்த மட்கலன்கள் ஆகியன இடம் பெற்றுள்ளன.

கண்காட்சியில் எம்டன் கப்பல் சென்னை மீது எறிந்துவிட்டுச் சென்ற வெடிகுண்டுகளின் எச்சங்கள் மற்றும் இசைக் கருவிகள், இன்றைய தலைமுறையினர் அறிந்திராத தோலா, எடைக் கற்கள். மரக்கால், படி போன்ற அளவைகள் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இனிய தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என மூன்றாக பிரிந்திருப்பது போல சென்னை தின கொண்டாட்டங்கள் கண்காட்சி வடிவிலும், கலை நிகழ்ச்சிகள் வடிவிலும் கருத்தரங்கு வடிவிலும் மூன்று வகையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு அருங்காட்சியகத் துறையை மேலும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மாபெரும் சோழர் அருங்காட்சியகத்தை தஞ்சாவூரில் அமைக்க உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பை அறியச் செய்கின்ற வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் ஒன்று சென்னை ஹூமாயூன் மகாலில் அமைக்கப்பட உள்ளது. மேலும், வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் சேலம், விருதுநகர் அருங்காட்சியகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி அருங்காட்சியகங்களுக்கு சுமார் 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் வேலூர், கடலூர் அருங்காட்சியகங்கள் விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அவர் பேசினார்.இந்த கருத்தரங்கில், சுற்றுலாத்துறை செயலர் பி. சந்தரமோகன், அருங்காட்சியக இயக்குநர் கவிதா ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in