மாணவர்கள் தொடர் போராட்டம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி காலவரையன்றி மூடல்

மாணவர்கள் தொடர் போராட்டம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி காலவரையன்றி மூடல்

Published on

கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியரைக் கண்டித்து, மாணவ - மாணவியர் தொடர் போராட்டம் நடத்திவருவதை அடுத்து அக்கல்லூரி காலவரையன்றி மூடப்பட்டது.

கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியின் முதுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயவாணி ஸ்ரீ. இவர், முதுநிலை தமிழ்த் துறை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்தியபோது, சாதிய ரீதியாகவும், பெண்களை தரக்குறைவாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ - மாணவியர் கல்லூரி முதல்வரிடம் அண்மையில் கடிதம் வழங்கினர். ஆனால், பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், மாணவ - மாணவியர் கடந்த 15ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ’இளைஞர் அரண்’ என்ற அமைப்பின் சார்பில், மாணவ - மாணவியர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கல்லூரி காலவரையன்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கல்லூரி முதல்வர் அ.மாதவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கல்லூரியில் நிலவும் அசாதாரண சூழல் கருதி கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின் படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையன்றி மூடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in