Published : 28 Aug 2024 06:04 AM
Last Updated : 28 Aug 2024 06:04 AM
சென்னை: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்தளவுக்கு சிதைக்கப்பட்டது என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் தொடங்கிய தமிழ்மொழி அகாடமி சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய, இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த ஆங்கிலப் புத்தகம், சட்டமேதை அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு பற்றிய தமிழ்ப் புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், ‘இந்திய அரசியலமைப்பு’ எனும் புத்தகத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட, முதல் பிரதியை சென்னைஉயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிபி.என்.பிரகாஷ் பெற்றுக் கொண்டார். ‘சட்டமேதை அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு’ எனும் புத்தகத்தை விஜடி வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:
நம் கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.வி.ஹண்டே, தனது 97 வயதிலும் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் எழுத்துப் பணி மூலம் பாடுபட்டு வருகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதை உருவாக்கிய சட்டமேதை அம்பேத்கர் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகங் களை அனைவரிடத்திலும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி அவசர நிலைகொண்டு வந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அனைவரிடத்திலும் தெரிவிக்க வேண்டும். இந்தப் புத்தகங்களை தலா 5 ஆயிரம் வீதம் மொத்தம் 10 ஆயிரம் பிரதிகள் வாங்கி தமிழக பாஜக அலுவலகங்களில் வைக்கப்படும்.
காஷ்மீருக்கு தனி அந்தஸ்து அளிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 370-வது பிரிவைக் கொண்டு வருவதற்கு அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். அதையும் மீறி அந்தப் பிரிவு கொண்டு வரப்பட்டது. அதுபோல இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356-ஐ 106 தடவை பயன்படுத்தி உள்ளனர். இதுதொடர்பான தகவல்கள் இந்தப் புத்தகங்களில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
இப்புத்தகங்களை பொதுமக் கள் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் படிக்க வேண்டும். இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த அளவுக்கு சிதைக்கப்பட்டது என்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
நாம் அரசியல் வேற்றுமையை மறந்து நாட்டுக்காகவும், மக்களுக் காகவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக டாக்டர் ஹெச்.வி.ஹண்டே தாம் எழுதிய புத்தகங்கள் குறித்து அறிமுக உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT