Last Updated : 29 Jun, 2018 04:12 PM

 

Published : 29 Jun 2018 04:12 PM
Last Updated : 29 Jun 2018 04:12 PM

சுதந்திர போராட்ட தியாகிகளை தேடி கண்டுபிடித்து வீட்டின் கதவை தட்டி ஓய்வூதியம் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் ஓய்வூதியத்துக்காக விண்ணப்பிக்கும் வரை காத்திருக்காமல், அவர்களை தேடி கண்டுபிடித்து வீட்டின் கதவை தட்டி ஓய்வூதியம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி பி.எஸ்.பெரியய்யா (91). இவர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கு சென்றவர். இவர் தமிழக அரசின் தியாகிகள் ஓய்வூதியம் பெற்று வந்தார். மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் கேட்டு பெரிய்யா மதுரை மாவட்ட ஆடசியரிடம் மனு அளித்தார். இவரது மனுவை நிராகரித்து மதுரை மாவட்ட ஆட்சியர் 24.12.2013-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்து மத்திய அரசின் ஓய்வூதியம் கேட்ட பெரியய்யா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நிலுவையில் இருந்த போது பெரியய்யா இறந்தார். பின்னர் அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் வழக்கை தொடர்ந்து நடத்தினர். மனுவை விசாரித்து, பெரியய்யாவுக்கு மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தனி நீதிபதி 28.4.2017-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மத்திய உள்துறை செயலர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்தும், பெரியய்யாவுக்கு மத்திய அரசின் தியாகி ஓய்வூதியம் வழங்க நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் உத்தரவில் கூறியிருப்பதாவது:

“மத்திய அரசின் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் வந்தால், அந்த விண்ணப்பம் தொடர்பாக விசாரித்து மத்திய அரசுக்கு ஆட்சியர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். அந்த பரிந்துரையின் பேரில் மத்திய அரசு தான் முடிவெடுக்கும். ஆனால் மதுரை மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யாமல் அதிகாரவரம்பை மீறி அவராகவே மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர போராட்டங்களில் ஏராளமானோர் சுயநலம் இல்லாமல் பங்கேற்று நாட்டை காலனி ஆதிக்கத்தின் பிடியிலிருந்து மீட்டுள்ளனர். அவர்கள் சுயநலம் இல்லாமல் போராடியதன் விளைவாகவே நம்மால் சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது. அப்படிப்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கும் போது அந்த விண்ணப்பங்களை தொழில்நுட்ப ரீதியாகவும், மூடிய கண்களுடன் அணுகக்கூடாது.

உண்மை நிலவரத்தை கருத்தில் கொண்டு தியாகிகள் ஓய்வூதிய விண்ணப்பங்களை மத்திய, மாநில அரசுகள் அணுக வேண்டும். நாட்டிற்காக பாடுபட்ட தியாகிகளை கவுரவிப்பது நமது கடமை. அவர்களுக்கு சாதகமாக ஒரு ஆவணம் இருந்தாலே, அதையேற்று ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செய்யாமல் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்காக தொழில்நுட்ப காரணங்களை தேடி அலையக்கூடாது.

மத்திய, மாநில அரசுகள் தியாகிகள் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பங்கள் வரும் வரை காத்திருக்காமல், தியாகிகள் எங்கிருக்கிறார்கள் என தேடி கண்டுபிடித்து, வீட்டின் கதவை தட்டி அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்”

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x