“சமூக நீதி முழக்கமிட்டுக் கொண்டே..” - அரசுத் துறைகள் ஆலோசகர்கள் விவகாரம்; திமுகவுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

“சமூக நீதி முழக்கமிட்டுக் கொண்டே..” - அரசுத் துறைகள் ஆலோசகர்கள் விவகாரம்; திமுகவுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
Updated on
1 min read

கோவை: சமூக நீதி முழக்கமிட்டுக் கொண்டே சமூக நீதியை காலில் போட்டு மிதிப்பது தான் திமுக-வுக்கு வழக்கம் என்பதை தலைமைச் செயலக சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது என்று எம்எல்ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மத்திய அரசு நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட துறைகளில் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிபுணத்துவம் வாய்ந்தவர்களை, மத்திய அரசுத் துறைகளில் குறிப்பிட்ட காலத்திற்கு நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டு காலங்காலமாக இருக்கும் நடைமுறைதான். ஆனால், இந்த முறையை பாஜக அரசு செயல்படுத்த முயற்சித்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு நாடகம் நடத்தின.

மத்திய அரசில் நேரடி நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “நேரடி நியமனம் என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்” எனக் கூறியிருந்தார். ஆனால், இந்த விவகாரத்தில் திமுக அரசின், முதல்வர் ஸ்டாலினின் இரட்டை வேடத்தை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், இணைச் செயலாளர் அ.ஜீவன் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில், ”திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. தொடக்கத்தில் சில துறைகளில் மட்டுமே இருந்த ஆலோசகர்கள் நியமனம், தற்போது அனைத்துத் துறைகளிலும் புற்றீசல் போல் பெருகிவிட்டது.

எந்த வரைமுறையும் இன்றி நியமனங்கள் செய்யப்படுவதுடன், ஊதிய நிர்ணயத்துக்கு எந்த வழிகாட்டுதலும் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு தேர்வாகி, பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களின் முக்கியத்துவத்தையும் திறமையையும பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆலோசகர்கள் மூலம் அரசு நிர்வாகத்தை நடத்துவது ஏற்புடையதல்ல’ எனக் கடிதத்தில் கூறியுள்ளனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். சமூக நீதி, சமூக நீதி என முழக்கமிட்டுக் கொண்டே சமூக நீதியை காலில் போட்டு மிதிப்பது தான் திமுகவுக்கு வழக்கம். தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in