Published : 27 Aug 2024 06:34 AM
Last Updated : 27 Aug 2024 06:34 AM

பொதுமக்களுக்கு பெரும் சுமையாகும்; சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது: அரசியல் தலைவர்கள், வணிகர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெரும் சுமை என்பதை உணர்ந்து, செப்.1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள சுங்கக்கட்டண உயர்வைரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அரசியல் தலைவர்கள், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 62 சுங்கச்சாவடிகள் இயங்கி வரும் நிலையில் அதில் உள்ள 34 சுங்கச்சாவடிகளில், கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்.1-ம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் எனதேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டுக்கான உயர்வு மிகவும் அதிகமாகும்.

வெளிப்படைத்தன்மை இல்லை: ஒவ்வோர் ஆண்டும் கட்டணம்உயர்த்தப்பட்டாலும், சுங்கக்கட்டண வசூல், கட்டண உயர்வுஆகியவற்றில் எந்த வெளிப்படைத்தன்மையும் இருப்பதில்லை. அதேபோல சாலைகளும் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. சுங்கக் கட்டணங்களை உயர்த்துவதற்கு எவ்வித நியாயமான காரணமும் இல்லாத நிலையில், வரும் செப்.1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள 25 சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது.இதனால் ஏற்கெனவே வசூலிக்கப்படும் கட்டணத்தோடு ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதையொட்டி அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும். எனவே, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா: தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்.1-ம் தேதி முதல் 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. தொடரும் சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும். இதனால்நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இது பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெரும் சுமை என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x