Published : 27 Aug 2024 06:47 AM
Last Updated : 27 Aug 2024 06:47 AM
சென்னை: பழைய மாணவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு, வயதானவர்கள் என்று அமைச்சர் துரைமுருகன் பதில் தந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இருவரும் நாங்கள்நீண்ட கால நண்பர் என்று கூறினார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “ஒருபள்ளியில் ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்துவிடுவார்கள். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமில்லை. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டுசெல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளனர். அமைச்சர் துரைமுருகன் கருணாநிதி கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர்” என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்த்திடம் இந்த பேச்சு திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, “வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது” என்றார். அவரது இந்த கருத்து பேசுபொருளாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்திடம் அமைச்சர் துரைமுருகன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினி, “துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும், எனக்கு வருத்தம் இல்லை. எங்கள் நட்பு எப்போதுமே தொடரும்” என்றார். தொடர்ந்து நடிகர் விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்தது குறித்த கேள்விக்கு, “விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என்றார்.
இதனிடையே வேலூர் விஐடியில் நேற்று நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், செய்தியாளர்களிடம் கூறும்போது, "எனது நகைச்சுவையை பகைச்சுவையாக யாரும் மாற்ற வேண்டாம். ரஜினிகாந்த் சொன்னதை தான் நானும் சொல்கிறேன். எங்களுடைய நட்பு தொடரும்" என தெரிவித்தார்.
உதயநிதி கருத்து: இதற்கிடையில், நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “நமது பக்கம் வருவதற்கு இளைஞர்கள் தயாராக உள்ளனர். நாம்தான் அவர்களுக்கு வழிவிட்டு, வழிநடத்தி, கைப்பிடித்து அழைத்து செல்ல வேண்டும். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது எதற்கு தெரியுமா அதிகமான கைத்தட்டல் வந்தது. நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். நான் சொல்லக் கூடாது. நான் ஏதோ மனதில் வைத்து சொல்வதாக நினைத்து கொள்வீர்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT