Published : 02 Jun 2018 07:00 PM
Last Updated : 02 Jun 2018 07:00 PM

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை மேலும் அதிகரிக்க வேண்டும்: முத்தரசன்

 

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுகளுக்கான வயது வரம்பு மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

குரூப்-1 தேர்வுக்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 ஆகவும் இருந்தது. இந்த நிலையில், குரூப்-1, குரூப்-1-ஏ, குரூப்-1-பி ஆகிய தேர்வுகளுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு (ஓசி) 30-லிருந்து 32 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 35-லிருந்து 37 ஆகவும் உயர்த்தி சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி நேற்று அறிவித்தார்.

குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை வெறும் 2 ஆண்டுகள் மட்டும் உயர்த்தியதால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள்தான். அதுவும் முதல்தலைமுறைப் பட்டதாரிகள்தான். அவர்களுக்கு குரூப்-1 தேர்வு பற்றிய விழிப்புணர்வு தாமதமாகவே ஏற்படுகிறது. அதன்பிறகு அவர்கள் தேர்வுக்கு தயாராகி முயற்சிக்கும்போது வயது வரம்பைக் கடந்து விடுகிறார்கள். எனவே, குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல் தமிழகத்திலும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும் என்று முதல்வருக்கு இளைஞர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''குரூப்-1 தேர்வுகளுக்கான வயது வரம்பை ஓ.பி.சி.பிரிவினருக்கு வயது 32 ஆகவும், ஏனைய இட ஒதக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பு 37 ஆகவும் உயர்த்தி முதல்வர் பழனிசாமி பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிவித்துள்ளார். இது போதுமானதல்ல, மேலும் உயர்த்தப்பட வேண்டும்.

2001 முதல் 2008 வரையிலான காலத்தில் வேலை நியமன தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு முறை நடத்தப்படும் தேர்வு முடிவுகள் வெளிவர ஏறத்தாழ மூன்றாண்டு காலமாகிறது. இதன்காரணமாக தேர்வில் பங்குபெறும் வயதைக் கடந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, பொதுப்பணியாளர்களுக்கான வயது வரம்பை 40 ஆகவும், ஏனைய இடஒதுக்கீடு பிரிவினருக்கு 45 வயதாகவும் தமிழக அரசு உயர்த்த வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x