சென்னை விமான நிலையத்தில் தங்க கடத்தலை தடுக்க சுங்கத் துறையில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்

சென்னை விமான நிலையத்தில் தங்க கடத்தலை தடுக்க சுங்கத் துறையில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்
Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தலை தடுக்க விமான நிலைய சுங்கத் துறையில் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் விமான நிலையத்தின் சர்வதேச முனைய புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி டிரான்சிட் பயணிகள் மூலமாக 2 மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து சுமார் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இந்த தங்கக் கடத்தலில் 9 பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், இன்னும் கடத்தப்பட்ட தங்கம்பறிமுதல் செய்யப்படவில்லை.

இந்நிலையில் தங்கக் கடத்தலைத் தடுக்க விமான நிலையசுங்கத் துறையின், ஏஐயூபிரிவில் ஏர் இன்டெலிஜென்ட் யூனிட் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், இதுவரையில் ஒரு துணை ஆணையர், ஓர் உதவி ஆணையர் மட்டுமே பணியில் இருந்தனர்.

தற்போது, 2 துணை ஆணையர்கள், ஓர் உதவி ஆணையர் என 3 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஏர் இன்டெலிஜென்ட் யூனிட் அதிகாரிகள் சுங்கத் துறை சீருடை அணியாமல், சாதாரண உடைகளில் பயணிகளைப் போல், விமானப் பயணிகளை கண்காணிக்கின்றனர்.

மோப்ப நாய்கள்: விமானத்திலிருந்து பயணிகள் இறங்குவதிலிருந்து, அவர்கள் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, வெளியே செல்லும் வரையில் தொடர்ச்சியாக கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

போதைப் பொருள் கடத்தலும் அதிகரித்து வருவதால், கடத்தல் கும்பலை அடையாளம் காண சுங்கத் துறையின் மோப்ப நாய்களை அதிக அளவில் பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆண்களுக்குச் சமமாக பெண் பயணிகளும் அதிகமாக தங்கக் கடத்தலில் ஈடுபடுவதால், விமான நிலைய சுங்கத் துறையில் பெண் அதிகாரிகள் உட்பட 6 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in